மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நம்பகத்தன்மை: சிவசேனாவும் சந்தேகம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      இந்தியா
tn local election 2016 09 25

புதுடெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பாராளுமன்றத்தில்  சிவசேனாவும் கேள்வி எழுப்பியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நம்பகத்தன்மை குறித்து உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, மேற்குவங்க திரிணாமூல் காங்கிரஸ் அரசு முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல கட்சி தலைவர்கள் இந்த சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும் மாயாவதி அறிவித்துள்ளார். தேர்தல் கமிஷன் கொடுத்த விளக்கத்தையும் ஏற்க மாயாவதி மறுத்துவிட்டார்.

பாராளுமன்றம்:


இந்த பிரச்சினையை நேற்று பாராளுமன்றத்தில் சிவசேனா கட்சியும் எழுப்பி சந்தேகத்தை தெரிவித்தது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நம்பகத்தன்மையை நிரூபிக்க வாக்களித்த பின்னர் தாம் யாருக்கு வாக்களித்தோமோ அவருக்கு வாக்கு விழுந்துள்ளதா என்பதை அறிய இயந்திரத்தில் இருந்து பதிவு துண்டு சீட்டு வெளியே வரவேண்டும் என்று சிவசேனா கட்சி உறுப்பினர் கேட்டுக்கொண்டார். பாராளுமன்ற லோக்சபையில் நேற்று கேள்வி நேரத்திற்கு பின்னர் சிவசேனா கட்சியை சேர்ந்து உறுப்பினர் ஸ்ரீராங் அப்பா பர்னே எழுந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பல எதிர்க்கட்சிகள் கேள்வியும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நம்பகத்தன்மை குறித்து எங்களுடைய கட்சி தலைவர்களும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி தேர்தலில் சிவசேனா உள்பட பல கட்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவு வரவில்லை. அதனால் வாக்காளர்கள் வாக்களித்தவுடன் அவர்கள் சரிபார்க்க இயந்திரத்தில் இருந்து வாக்குப்பதிவு துண்டு சீட்டு வெளியே வரும்படி மத்திய அரசு செய்ய வேண்டும் என்று  பர்னே கேட்டுக்கொண்டார். இதற்கு சிவசேனா கட்சியை சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தவிர இதர பிரச்சினைகள் குறித்தும் உறுப்பினர்கள் பேசினர்.

செல்போனை அதிக அளவில் பயன்படுத்தினால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும்  என்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்தும் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று பிஜேடி உறுப்பினர் பாரத்ருஹாரி மஹ்தாப் கேட்டுக்கொண்டார். மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் செல்போன் டவர்களை அமைக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: