முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு பிரச்சனையில் தி.மு.க செய்தது என்ன? சட்டசபையில் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, கச்சத்தீவை மீட்க உச்சநிதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆனால், தி.மு.க. என்ன செய்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் காட்டமாக கேட்டார். மேலும், கச்சத்தீவு பிரச்சனையில் துரோகம் செய்தது யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் அமைச்சர் ஆவேசமாக தெரிவித்தார்.

கவனஈர்ப்பு தீர்மானம்

இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது குறித்தும் நேற்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

தி.மு.க.வினர் எதிர்ப்பு

சமீபத்தில் நடந்த கொடூரமான தாக்குதலில் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். மீனவர்கள் மீது தொடர்ந்து இதுபோன்று தாக்குதல் நடத்தப்படுவது பற்றி எல்லாம் ஸ்டாலின் கூறினார். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்று ஜெயக்குமார் குறிப்பிட்டபோது ஸ்டாலின் உட்பட தி.மு.க.வினர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1974-ம் ஆண்டு என்றுதானே நான் சொன்னேன். அதற்கு ஏன் இப்படி எழுந்து நின்று கூச்சல் எழுப்புகிறீர்கள். நான் யாரைப் பற்றியும் எந்த கட்சி பற்றியும் குறிப்பிடவே இல்லையே? 1974 என்றதும் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டார்.

அப்போது சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு அமைச்சர் யாருடைய பெயரையும், எந்த ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனவே அனைவரும் அமைதியாக உட்காருங்கள் என்று கூறினார். அப்போது ஸ்டாலின் எழுந்து நான் இந்த பிரச்னையில் அரசியல் எதையும் கலக்கவில்லை. மீனவர் தாக்கப்படுவது குறித்துதான் பேசினேன். ஆனால் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று கூறுகிறார். அப்போது தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது என்றும் கூறினார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு உங்கள் கட்சி பெயரை அமைச்சர் கூறவில்லை. அப்படி அவர் சொல்லி இருந்தால் நீங்கள் விளக்கமளிக்கலாம். அவர் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்றுதானே சொன்னார். உங்கள் கட்சி பெயரை அமைச்சர் சொல்லவில்லையே என்று கூறினார்.

தி.மு.க.வினர் மீண்டும் கூச்சல்

மீண்டும் தி.மு.க.வினர் எழுந்து கூச்சல் எழுப்பினார்கள். இதற்கிடையில் அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து பேசினார். நான் வரலாற்று குறிப்புகளைத்தான் சொன்னேன். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உங்கள் கட்சி தலைவர் பற்றியும் சொல்லவில்லை. இதற்கு நீங்கள் கோபப்படத் தேவை இல்லையே. 1974-ம் ஆண்டு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று ஜெயக்குமார் கேட்டார். மீண்டும் ஸ்டாலின் எழுந்து பேசினார்.

1974-ம் ஆண்டு கச்சத்தீவு பிரச்சினை எழுந்தபோது கருணாநிதி அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. அதனை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது என்று கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி கச்சத்தீவு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியது என்று ஸ்டாலின் கூறினார்.

துரோகம் செய்தது யார்?

உடனே அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து கச்சத்தீவை மீட்க அம்மா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஜெயலலிதா உறுதியுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். 1998-ம் ஆண்டு கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீங்கள் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபின் இதுபோன்று வழக்கு தொடர்ந்தீர்களா என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கேட்டார். கச்சத்தீவு பற்றி அம்மா பலமுறை இந்த மன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு பிரச்சினையில் யார் துரோகம் செய்தது என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்று ஜெயக்குமார் கூறினார்.

கடந்த 17-ம் தேதி அன்று டெல்லி சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நானும், அமைச்சர்களும் சந்தித்து தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது பற்றியும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பேசினோம் என்று ஜெயக்குமார் கூறினார். மத்திய அமைச்சரிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

மீனவர்களை சுடக்கூடாது

நமது எல்லைக்குள் தமிழக மீனவர்கள் அமைதியாக மீன்பிடிக்கும்போது காற்றின் வேகம் காரணமாகவும், திசை மாறுவதாலும் கற்பனை எல்லைக்கோட்டை தாண்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலை ஏற்பட்டால் மீனவர்களை தாக்கக்கூடாது, சுடக்கூடாது, வலைகளை அறுக்கக்கூடாது. அப்படியே மீனவர்கள் பிடிபட்டாலும் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
முதலாவதாக, பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் அமைதியான முறையில் மீன்பிடிக்க மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். 2-வதாக தமிழக மீனவர்களை சிறை பிடிக்கக்கூடாது, துன்புறுத்தக்கூடாது, சுடக்கூடாது என்று கோரிக்கை வைத்தோம். 3-வதாக ஏற்கனவே பிடிபட்ட 128 விசைப்படகுகளையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று கோரினோம்.

பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க விசேஷ தொகுப்பாக 1,664 கோடி ரூபாய் நிதி வேண்டும் என்று பிரதமரிடம் ஏற்கனவே அம்மா வலியுறுத்தி இருந்தார். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி ரூபாய் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சுடப்படுவது நிச்சயம் தடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago