முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மீனவர்கள், 129 படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை எடுங்கள் : பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  -  இலங்கை கடற்படையினர்  தற்போது பிடித்துச்சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரையும், இலங்கையில் உள்ள 129  படகுகளையும் மீட்க, வெளியுறவுத்துறை மூலம் தூதரக அதிகாரிகளின் வாயிலாக, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு  நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்தில் இருந்து  மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும், இலங்கை கடற்படையினர், அந்நாட்டில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 இலங்கை கடற்படை மதிப்பதில்லை
கடந்த 6-ம் தேதி, இந்திய மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நடந்துள்ள இந்த சம்பவம், நமது தூதரக நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மதிப்பதில்லை என்பதையே காட்டுவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் பழனிச்சாமி , இப்பிரச்னைக்கு தூதரகம் மூலமாக தீர்வு காணும் முயற்சியை, இலங்கை கடற்படை தடுக்க முயற்சிப்பதையே இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

சிறப்பு திட்டத்திற்கு நிதி தாருங்கள்
மீனவர்களுக்காக விரிவான சிறப்பு திட்டத்திற்கு, 1650 கோடி ரூபாய் நிதியை, உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்கையில் நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 129 படகுகளையும் புதுப்பித்து திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், படகுகள் இல்லாமல், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்னையை அணுக திட்டவட்டமான மாற்றம் ஒன்று தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி, இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற 10 மீனவர்களையும், அந்நாட்டில் உள்ள 129 மீன்பிடி படகுகைகளையும், உடனடியாக விடுவிக்க, பிரதமர் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, தூதரக வாயிலாக திட்டவட்டமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.டெல்லியி்ல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திப்பதற்காக தமிழக மீனவர்கள் குழு  டெல்லி சென்றுள்ள இந்த நிலையிலும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இரண்டு  தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கற்கள் வீசி தாக்கப்பட்டார்கள் .மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடக்காது என்று மத்திய அமைச்சர் சுஷ்மா கூறிய மறுநாளே மீனவர்கள் தாக்கப்பட்ட கொடுமை நடந்தது. நேற்று மீண்டும் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்