முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு அருகே 10 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

 ராமேஸ்வரம்  - கச்சத்தீவு அருகே பழுதாகி நின்ற படகை கைப்பற்றி 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.  இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து கடந்த மார்ச் 7 ம் தேதியிலிருந்து ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டக் களத்திற்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரடியாகச் சென்று மீனவப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதிமொழி அளித்ததன் அடிப்படையில் பிரிட்ஜோவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து திங்கட்கிழமை ஐநூறுக்கும் மேற்பட்ட படகில் 2,000-த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜஸ்டின் என்பவரது படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பழுதானது. படகில் இருந்த ராயப்பு, செல்வா, தமிழ், சுபாஷ், மாணிக்கம், பாண்டி, காஸ்ட்ரோ, முத்துக்குமார், திபி, ரஞ்சித் ஆகிய 10 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர்  சிறைப்பிடித்தனர்.

மீனவர்கள் பெரும் அதிர்ச்சி
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழக மீனவப் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்திய சூழலில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறைப்பிடித்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. சிறைப்பிடிக்கப்பட்ட 10 மீனவர்களும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்