முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் சிறையில் உள்ள 35 மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஈரான் கடற்பகுதிக்குள் வழி தவறிச் சென்று சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 35 தமிழக மீனவர்களை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விபத்தில் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடலை தாயகம் கொண்டுவரவும், காணாமல்போன மற்றொரு கன்னியாகுமரி மீனவரை விரைவில் தேடிக் கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமருக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்.

35 மீனவர்களை மீட்க...
முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பிரதமர்  நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்., பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்கச் சென்ற 35 தமிழக மீனவர்கள் 3 வெவ்வேறு சம்பவங்களில் ஈரானிய கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்தபோது, அவர்களை ஈரான் கடலோர காவல்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் மீனவர்களை மீட்டுக்கொண்டுவர சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என முதல்வர், பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருக்கு மற்றொரு கடிதம்
இதேபோன்று, முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி, நேற்று பிரதமர்  நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ், நிவில், ஜோசப் ஆகிய 3 பேர் சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 18-ம் தேதி கடலில் நேரிட்ட விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பலியான ஜார்ஜ், ஜோசப் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றொரு மீனவரான நிவிலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பணப்பயன்களை பெற்று தாருங்கள்
இந்நிலையில், உயிரிழந்த 2 மீனவர்களின் உடல்களை தாயகம் கொண்டுவரவும், காணாமல்போன மீனவரை விரைவாக தேடிக் கண்டுபிடிக்கவும் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. மேலும், இம்மீனவர்களுக்கு அவர்கள் பணியாற்றிய நிறுவனத்திடமிருந்து கிடைக்க வேண்டிய பணப்பயன்களை விரைவில் பெற்றுத் தரவும் பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது 2-வது கடிதத்தில் முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 10 பேரையும் இலங்கையில் உள்ள 129 படகுகளையும் மீட்டுத்தர வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமரை முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், நேற்றும் அவர் மீனவர் பிரச்சனை தொடர்பாக பிரதமருக்கு 2 கடிதங்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்