முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வலியுறுத்தி நாளை டில்லி பயணம் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - நீட் மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, நாளை டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கோவி.செழியன்,  பொறியியல் மற்றும் மருத்துவக்கல்விக்கான நுழைவுத்தேர்வை முதன் முதலாக ரத்து செய்தவர் கருணாநிதி. தான். அவர் முதல்வராக இருந்தபோது, கிராமப்புற மாணவர்கள் நகரப்புறமாணவர்களின் இடைவெளியை தவிர்க்க நுழைவுத்தேர்வை ரத்து செய்தார், கருணாநிதி முதல்வராக இருந்தபோது தான் கோடீஸ்வர வீட்டு பிள்ளைகளும், குடிசை வீட்டு பிள்ளைகளும் ஒரே பாடத்திட்டத்தில் படிக்கும் சமச்சீர்க்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார், தற்போது மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்,

இது குறித்து பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் நுழைவுத்தேர்வை இந்தியாவிலேயே மிக உறுதியாக எதிர்த்த அரசு, ஜெயலலிதா அரசுதான். இந்த தேர்வை ரத்து செய்ய சட்டரீதியான நடவடிக்கையும் அரசியல் ரீதியான அழுத்தமும் கொடுத்தது தமிழக அரசு தான். நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவும் தயார் என்று ஜெயலலிதா தேர்தல் காலத்தில் அறிவித்தார், மருத்துவக்கல்விக்கான நுழைவுத்தேர்வை இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு கொண்டு வரக்கூடாது என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம், இது குறித்து பிரதமர் மோடியையும் மத்திய சட்டஅமைச்சரையும் சந்தித்து நீட்டை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறோம், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நீட்டை அமல்படுத்தப்படக்கூடாது என்றும் மத்திய அரசை கேட்டுக்கொண்டிருக்கிறோம், வரும் 24-ம் தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து மீண்டும் வலியுறுத்த இருக்கிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்