முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - சென்னை குடிநீர் தட்டுப்பாட்டைதமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தும்படி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்,  தமிழக சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின்னர்தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தி.மு.க. உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர், இதற்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளாச்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பதில் அளித்து பேசியதாவது, தமிழக வரலாற்றில், கடந்த 140 வருடங்களில் இல்லாத வகையில், இந்த வருடம், பருவமழை பொய்த்து, 62 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

அதன் காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, முதலமைச்சரின் தலைமையிலும், எனது தலைமையிலும், பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, 976 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறுகளை புனரமைத்தல், சிறு மின்விசை பம்புகள் மற்று கைப்பம்புகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், பிளாஸ்டிக் தொட்டிகள் நிறுவுதல், பழுதடைந்த மோட்டார்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த தீர்க்கதரிசனமான நடவடிக்கையின் காரணமாக, நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

2016ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணத்தாலும், கிருஷ்ணா நதி நீர்வரத்து குறைந்ததாலும், நீராதரங்களில் இருப்பு மிகவும் மோசமான நிலை அடைந்துள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு, ஏரிகள், கிருஷ்ணா நதி நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், வீராணம் திட்டம், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீராதாரங்கள், பூண்டி மற்றும் தாமரைப்பாக்கம் கிணற்றுத் தளங்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வரும் மே மாதத்தில் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் வற்றிப்போகும் சூழ்நிலையை எதிர்பார்த்து, வறட்சி நிவாரணப் பணிகள் சுமார் 100 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையைத் தவிர்த்து இதர பகுதிகளில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் 553 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம், 4.21 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றுக்கு 1,565 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.வறட்சியை சமாளிக்க, புதிய ஆழ்துளைக் கிணறுகள், புதிய நீர் உறிஞ்சு கிணறுகள் அமைத்தல், உள்ளிட்ட 1,898 நீராதார புனரமைப்புப் பணிகள் 98.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வறட்சியை சமாளிக்கும் பொருட்டு, குடிநீர் லாரிகள் மூலம் 10 மாநகராட்சிகள் மற்றும் 68 நகராட்சிகளில் 189 நகராட்சி லாரிகள், 167 தனியார் வாடகை லாரிகள் மூலமும் தினமும் 15 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வறட்சி நிவாரணப் பணிகளின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1337 புதிய ஆழ்துளை கிணறுகள், உள்ளிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் 65.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தேதியில், 839 பணிகள் 26. 08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.பேரூராட்சி பகுதிகளில் மார்ச் 2017 வரை குடிநீர் வழங்குதலில் எவ்வித பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பில்லை.பேரூராட்சிகளில் வறட்சி நிவாரணப் பணிகளின் கீழ், 3,595 பணிகள் 46.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 1,749 பணிகள் 10.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 1,846 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.ஊரகப் பகுதிகளில் வறட்சி நிவாரணப் பணிகளின் கீழ், 703.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குடிநீர்த் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ள மத்திய, மாநில நிதிக்குழு மானியம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட நிதி மற்றும் 14வது நிதிக்குழு செயலாக்க மானியம் மொத்தம் 818.25 கோடி ரூபாய், அரசால் ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.மேலும், பிப்ரவரி 2017 மாதத்தில், மாநில நிதிக் குழு மான்யமாக 114.58 கோடி ரூபாயும், மார்ச் 2017 மாதத்தில் 131.26 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை குடிநீர் விநியோக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாய்த் திட்டம்-2 ன் கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,200 சிறுபாசன கண்மாய்களில் தூர்வாருதல், குளங்கள் புனரமைத்தல், மதகுகள் போன்ற அடிப்படை கட்டமைப்புக்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட முழுமையான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகிய, அனைத்து நிதிகளையும், முன்னுரிமை அடிப்படையில் குடிநீர்ப் பணிகளுக்கு மட்டுமே, பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊரகப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, 703.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8,874 பணிகள் எடுக்கப்பட்டு, இன்றைய தேதியில், 4,271 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குழாய் மூலம் குடிநீர் செல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது., 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வறட்சி, பருவ மழை குறைவு, ஏரிகளில் நீர் இருப்பு குறைவு, நிலத்தடி நீர்மட்டம் சரிவு என பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், இயற்கையால் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்னையை இந்த அரசு மிகவும் திறமையாக கையாண்டு வருகிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை உலக நாடுகளே பாராட்டும் வகையில் செயல்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தினார். அவர் வழியில் செயல்படும் இந்த அரசு, குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்த ரூ.300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.இன்று உலக தண்ணீர் நாள். இந்த நாளில் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதியில் உள்ள பொது மக்களை சந்தித்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமான முறையில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.சட்டமன்ற உறுப்பினர்கள் குடிநீர் பிர்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிடமோ, என்னிடமோ நேரில் கூறலாம். மேலும் பொது மக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்