முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமிரபரணியை பாதுகாக்க வணிகர்கள் வாகனப் பிரசாரம்: த.வெள்ளையன் தகவல்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

தாமிரபரணியை பாதுகாக்கும் வகையில் வணிகர்கள் சார்பில் விரைவில் நெல்லை  மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்படும்  என நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.நெல்லை மாவட்ட வர்த்தகக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க  த.வெள்ளையன் வந்தார் ,தொடர்ந்து  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது-ஆன்-லைன் வர்த்தகம் மூலம் பணமில்லா பரிவர்த்தனை என்ற பெயரில் வணிகம் செய்கிறார்கள். இதனால் சிறு-குறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மே 5ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் வணிகர் உரிமை பிரகடன மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் வணிகர்களைப் பாதிக்கும் அந்நிய சக்திகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் பிரகடனங்கள் வெளியிடப்படும்.நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து  பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவது சரியானதல்ல. அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு மக்களின் குடிநீர்த் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தாமிரவருணியைப் பாதுகாக்கக் கோரியும், மக்களிடம் நதிகளின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இம்மாவட்டம் முழுவதும் வணிகர்கள் சார்பில் விரைவில் இருசக்கர வாகனப் பிரசாரங்கள் நடத்தப்படும்.தென்மாவட்டங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சேதுசமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். பீடி, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்யும் சிறு வணிகர்களை காவல் துறையினர் குற்றவாளிகளைப் போல அழைத்துச் சென்று மிகுந்த அலைக்கழிப்புக்கு ஆளாக்குகிறார்கள். பீடி, சிகரெட் போன்றவை தடை செய்யப்பட்ட பொருளா என்பது குறித்த விளக்கத்தை அரசு உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு நெல்லை  மாவட்ட வர்த்தகக் கழகத் தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் என்.மீரான், துணைத் தலைவர் வி.அருள் இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநகர வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஏ.ஜெ.எம்.சாலமோன், பெரியபெருமாள், ஜி.ராமகிருஷ்ணன் ,மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்