10 முதல் 14 வயது மாணவர்களின் விளையாட்டு திறனறிந்து பயிற்சி அளிக்கும் திட்டம் கலெக்டர் ராஜேஷ் அறிவிப்பு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      கடலூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் பிரிவின் மூலம் 2016-17ம் ஆண்டில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களின் விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து அதில் 20 சிறந்த மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கும் திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் 20 மாணவ, மாணவியர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுப் போட்டி நடத்தப்பட உள்ளது. தேர்வுப் போட்டிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள சிறு விளையாட்டரங்கில் 25.03.2017 அன்று காலை 10.00 மணியளவில் நடத்தப்பபட உள்ளது.இதில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 20 மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து பயிற்சியளிக்கப்படும். பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மாணவரல்லாதோர் இதில் பங்குபெற்று பயன்பெறலாம். கால்பந்து விளையாட்டில் மாதத்திற்கு 25 நாட்களுக்கு மிகாமல் (ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து), மாலை நேரங்களில் பயிற்றுநர்கள் மூலம் முறையான பயிற்சியளிக்கப்பட உள்ளது. இம்முகாமில் பங்கு பெறுவோருக்கு சீருடை, சத்தான உணவு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உள்ளுர் விளையாட்டுக்களில் பங்குபெறும் சமயம் சென்று வருவதற்கான பயணச் செலவு, நுழைவுக் கட்டணம் போன்றவை வழங்கப்பட உள்ளது. இது ஒரு முன்னோடித் திட்டமாகும். இதில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாணவர்கள் கால்பந்து விளையாட்டில் தங்கள் திறமைகளை மேம்படுத்தி சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்களை வெல்லும் நோக்கில் பயிற்சியளிக்கப்படும். ஏற்கெனவே ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் திட்டங்களான சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டம், விளையாட்டு விடுதித் தேர்வுகள், அகாடமிக்கள் போன்றவற்றில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்களுக்குத் தேர்வின்போது முன்னுரிமை அளிக்கப்படும். மாணவ, மாணவியர்கள் வயதின் அடிப்படையில் உடற்திறன் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வின்போது கலந்துகொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவியர் பள்ளியில் தாங்கள் படித்துவருவதற்கான சான்றிதழைப் பள்ளித் தலைமையாசிரியரிடம் பெற்று வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை அலுவலக நேரங்களில் 7401703495 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: