முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறைபிடிக்கப்பட்ட 26 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 26 பேர்களையும் 131 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார்.

பிழைப்புக்காக தமிழக கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அடிப்பதும், துன்புறுத்துவதும் அவர்களை இழுத்துச்சென்று இலங்கை சிறைகளில் அடைப்பது மட்டுமல்லாது அவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மீன்பிடி படகுகள் மற்றும் இதர மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்துவருவதும் இலங்கை கடற்படையினரின் ஈவு இரக்கமற்ற செயலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

16 மீனவர்கள்:

ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்ற பிறகு மீனவர்களின் பெரிய போராட்டம் காரணமாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 73 பேர் விடுவிக்கப்பட்டனர். மீனவர் பிரிட்ஜோவுக்கு இலங்கை அரசு இன்னும் நஷ்ட ஈடு எதுவும் வழங்காமல் இருக்கிறது. இந்தநிலையில் 16 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் பிடித்துச்சென்று சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

கடந்த 22-ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குட்டப்பட்ட கடல் பகுதியில் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 8 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டியிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த சிங்கள கடற்படையினர் அந்த 8 மீனவர்களையும் அடித்து உதைத்ததோடு அவர்களை இழுத்துச்சென்று இலங்கையில் உள்ள காரை நகர் சிறையில் அடைத்துவைத்துள்ளனர். அவர்களின் மீன்பிடி விசைப்படகையும் பறிமுதல் செய்துகொண்டு சென்றுவிட்டனர். அதேநாளில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 மீனவர்கள் ஒரு விசைப்படகில் சென்று ராமநாதபுரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்தனர். அந்தநேரத்தில் வந்த இலங்கை கடற்படையினர் அந்த 8 மீனவர்களையும் பயங்கரமாக தாக்கி காயப்படுத்தியதோடு அவர்களை இழுத்துச்சென்று இலங்கையில் உள்ள தலைமன்னார் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துகொண்டு சென்றுவிட்டனர். இப்படி தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடித்து துன்புறுத்தி விரட்டியடிக்கப்படுவதும் அவர்களை இழுத்துக்கொண்டு இலங்கை சிறைகளில் அடைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

வேதனை:

இதனால் தமிழக மீனவர்கள் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும் ஆளாகி இருப்பதோடு அவர்களும் அவர்களை சார்ந்த குடும்பத்தாரும் வேதனை அடைவதோடு பிழைப்புக்காக பெரும் சிரமப்படுகிறார்கள். அவர்களின் ஒரே வாழ்வாதாரம் மீன்பிடி தொழில்தான். அதையும் சிங்கள கடற்படையினர் தடுத்து வருவதால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தமிழக மீனவர்கள் மேலும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதைத்தடுத்து நிறுத்த தூதர ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களுக்கு (பிரதமர்) பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளேன். அப்படி இருந்தும் கடந்த 22-ம் தேதி மட்டும் 16 மீனவர்கள் பிடித்துச்செல்லப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 10 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். இவர்களை சேர்த்து 26 உடனடியாக விடுதலை செய்ய தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் வைக்கப்பட்டிருக்கும் 131 படகுகளையும் விடுவிக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாது இனிமேல் இந்தமாதிரியான சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்