நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி :கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      நாமக்கல்
4

திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத்திட்டத்தின் நாமக்கல் மாவட்ட அலகின் சார்பில் உலக காசநோய் அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து காசநோய் விழிப்புணர்வு பேரணியும் நேற்று(24.03.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று அனைவரும் ஒன்றிணைந்து காசநோயை ஒழிப்போம், காசநோய் இறப்பு மற்றும் காசநோய் இல்லா உலகை உருவாக்குவோம் என்ற தலைப்பிலான காசநோய் ஒழிப்பு உறுதிமொழியான இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல், சளி, மாலை நேரக்காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், சளியில் இரத்தம் வருதல் என்பன நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் என்பதை நன்கு அறிவேன். இரண்டு முறை சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை மூலம் காசநோயினை கண்டு பிடிக்கலாம் என்பதை அறிவேன். 6 மாதம் முதல் 8 மாதம் வரை நேரடி குறுகிய கால சிகிக்சை முறைப்படி சிகிச்சை எடுத்தால் காசநோயை முற்றிலும் குணப்படுத்தலாம் என்பதை அறிவேன். மேற்கூறிய வசதிகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட காசநோய் மையத்திலும் இலவசமாக கிடைக்கும் என்பதை அறிவேன். காசநோயாளிகள் இருமல் மற்றும் தும்மல் வரும்போது வாயை கைக்குட்டையால் மூடிக்கொண்டால் காசநோய் பரவுவதை தடுக்கலாம் என்பதை அறிவேன். சர்க்கரை நோய் மற்றும் எச்.ஐ.வி உள்ளோருக்கு காசநோய் எளிதில் தொற்றும் என்பதை அறிவேன். தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கண்டறியப்படும் காசநோயாளிகள் பற்றிய தகவல்களை அரசு ஆணையின்படி மாவட்ட காசநோய் அலுவலர் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை அறிவேன். நான் அறிந்தவற்றை என்னைச் சார்ந்த அனைவருக்கும் தெரியப்படுத்தி காசநோய் இல்லாத சமூதாயம் உருவாக்க உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து காசநோய் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் சிறப்பாக பணியாற்றிய 12 நபர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார். பின்னர் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சிகளில் நாமக்கல் இணை இயக்குநர் நலப்பணிகள், டாக்டர். சரஸ்வதி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.ரமேஸ்குமார், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.செல்வகுமார், உள்ளுறை மருத்துவ அலுவலர் டாக்டர்.கண்ணப்பன், துணை இயக்குநர் (காசநோய்) (பொ) டாக்டர்.ச.கணபதி, துணை இயக்குநர் (தொழுநோய்) (பொ) டாக்டர்.ஜெயந்தினி, மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட எச்.ஐ.வி கட்டுபாடு மற்றும் தடுப்பு பிரிவு கார்த்திகேயன், செஞ்சிலுவை சங்க செயலாளர் இராஜேஸ் கண்ணன், ரோட்டரி கிளப் ஆப் நாமக்கல் பவுல்ட்ரிடவுன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காசநோய் பணியாளர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 500க்கும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். இப்பேரணியானது நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி மோகனூர் சாலை, அண்ணாசிலை, பேருந்து நிலையம், திருச்சி சாலை வழியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்கு வந்தடைந்தது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: