முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் உலக காசநோய் தின விழா

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடைபெற்ற உலக காசநோய் தின நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் முனைவர் நடராஜன் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காசநோய் பிரிவில் பொது சுகாதாரத்துறை சார்பாக மாவட்ட கலெக்;டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் உலக காசநோய் தின விழா நடைபெற்றது.  இவ்விழாவில் 2016-ஆம் ஆண்டில், திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:- பொதுமக்களிடையே காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 24-ஆம் நாள் உலக காசநோய் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  காசநோய் கண்டறியப்பட்ட காலத்தில் குணப்படுத்த முடியாத நோயாக இருந்து வந்தது.  தற்போது மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு  வளர்ச்சியின்  காரணமாக காசநோய் தடுப்பிற்கான புதிய மருந்துகளும், மருத்துவ முறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.  6 மாதம் முதல் 8 மாதம் வரை தொடர்ந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் காசநோயினை முற்றிலுமாக குணப்படுத்திட முடியும். 

இக்காசநோயானது காற்றின் மூலமாக எளிதில் பரவக்கூடிய நோயாகும்.  எனவே காசநோய் உள்ளவர்கள் துணியால் வாயை மூடி இரும வேண்டும்.  கண்ட இடங்களில் சளி துப்புவதை தவிர்த்திட வேண்டும்.  2 வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக இருமல் பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  இதன்மூலம் காசநோய் பாதிப்பினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி குணப்படுத்திட முடியும்.  மேலும் காசநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்கும், காசநோய் எளிதில் பரவக்கூடிய வாய்ப்புள்ள காரணத்தினால், சிகிச்சை அளிக்கும் நேரங்களில் மருத்துவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிட வேண்டும். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 62 மையங்களில் காசநோய் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.  2016-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் மொத்தம் 17,042 நபர்களுக்கு காசநோய் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 1,545 நபர்களுக்கு காசநோய் இருப்பதாக கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  2015-ஆம்ஆண்டில் 1,607 நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டு 1,443 நபர்கள் தொடர் சிகிச்சை பெற்று பூரணமாக குணமடைந்துள்ளனர்.  காசநோயின் பாதிப்பு மற்றும் காசநோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இராமநாதபுரம் மாவட்டத்தினை 100 சதவீதம் காசநோய் பாதிப்பில்லாத மாவட்டமாக ஏற்படுத்திடும் வகையில் மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார்.

அதன்பிறகு, கலெக்டர் 2016-ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார். அதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காசநோய் பிரிவு வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியைச் சார்ந்த மாணவியர்கள் பங்கேற்ற உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கி புதிய பேருந்து நிலையம், வழிவிடு முருகன் கோயில் வழியாக மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில்  பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.ஏ.சகாய ஸ்டீபன் ராஜ், துணை இயக்குநர் (காசநோய்) மரு.ஏ.முனியரசு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.எம்.கருப்பசாமி, மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர்  டாக்டர்.ஜி.ஆர்.ஸ்ரீதர், மருந்தாளுநர் ஆர்.ஜெயசங்கர் உள்பட அரசு அலுவலர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்