முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: வாசன் கோரிக்கை

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு 2010-ல் அறிவித்தது.

இத்திட்டத்திற்கு தமிழக அரசு 2013-ம் ஆண்டில் இடைக்கால தடை விதித்தது. அதன் பிறகு 2015-ல் தமிழக அரசு மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு நிரந்தர தடை விதித்தது. மேலும் 2015-ல் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் குழு புதிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் தற்போது மீண்டும் அனுமதி அளித்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.காரணம் ஏற்கனவே தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு விவசாயிகள், பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு இத்திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் மீண்டும் இப்போது மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி அளித்திருப்பது மத்திய பா.ஜ.க. அரசின் நம்பகத்தன்மை இல்லாத ஆட்சியை வெளிப்படுத்தியிருக்கிறது.தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் விரும்பாத, ஏற்று கொள்ள மறுக்கின்ற மீத்தேன் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் குழு எக்காரணத்திற்காக மீண்டும் அனுமதி அளித்திருக்கிறது.மத்திய பா.ஜ.க. அரசு தெரிந்தே செய்கிறதா அல்லது வீண்பிடிவாதப் போக்கா அல்லது மக்கள் விரோதப்போக்கா அல்லது எந்த இலாப நோக்கத்திற்காக செயல்படுகிறது அல்லது எதற்காக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.மேலும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்காக அளித்திருக்கும் அனுமதியை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக ரத்து செய்வதோடு, இனிமேலும் இத்திட்டம் தொடர்பாக தமிழகத்தில் எந்த ஆய்வுப்பணியும் மேற்கொள்ள மாட்டோம் என்ற உறுதியை தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்