முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - லைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இலங்கை பயணத்தை நடிகர் ரஜினிகாந்த் ரத்து செய்துள்ளதற்கு வைகோ ,திருமாவளவன், வேல்முருகன்,  உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கடும் எதிர்ப்பு
தமிழர்களுக்காக லைக்கா நிறுவனம் கட்டிய வீடுகள் திறந்து வைக்க இலங்கை செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டார். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

ரஜினியின் பயணம் ரத்து
இதனை ஏற்று ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், மீண்டும் இலங்கை செல்ல வாய்ப்பு வந்தால் அதை அரசியலாக்க வேண்டாம்  என்று ரஜினி காந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இலங்கையில் புனிதப்போர் நடந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல்வாதியல்ல
தமிழ் மக்களை பார்த்து மனம் திறந்து பேச எண்ணினேன் என்றும், தமிழக மீனவர் பிரச்சினை பற்றி இலங்கை அதிபரிடம் பேச எண்ணியிருந்தேன் என்றும் நான் அரசியல்வாதியல்ல, சினிமா கலைஞன் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

 திருமாவளவன் வரவேற்பு
ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். ரஜினிகாந்த் மீது தமக்கு எந்த காழ்புணர்ச்சியும் இல்லை என்றும் கூறியுள்ளார். புனிதப்போர் இப்போதுள்ள சூழ்நிலையில் ரஜினி சென்றால் அது பாதகமாக அமையும் என்று அங்குள்ள தமிழர்கள் கூறினார்கள். இதனாலேயே தான் ரஜினியின் இலங்கை பயணத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறினார். சிங்களர்களின் புனிதப்போர் அல்ல என்றும்  விடுதலைப்புலிகள் நடத்திய புனிதப்போர் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

வைகோ வரவேற்பு
ரஜினியின் அறிக்கைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். ரஜினியின் இலங்கை பயணம் பற்றி கேள்விப்பட்ட உடன் அவருடன் தாம் தொலைபேசியில் பேசியதாக கூறிய வைகோ, அங்குள்ள நிலையை விரிவாக எடுத்துக்கூறியதாக தெரிவித்தார். விளம்பரத்திற்காக ரஜினியின் பயணத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.  இதே போல ரஜினிகாந்தின் இலங்கை பயண ரத்துக்கு பண்ருட்டி வேல்முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழர்களின் துயரங்களை ரஜினி நேரில் கேட்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இந்த விழாவை அரங்கேற்றுவதன் மூலம் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மீள்குடியேற்றம் சிறப்பாகவே நடப்பதாக உலகை நம்ப வைப்பதுடன் இனப்படுகொலை விசாரணையை முடக்கியதற்கு எதிராக எழும் கண்டனங்களை மூடி மறைப்பதுமாகும்.

 நட்பு நாடுகளின் உதவியோடு ஐ.நாவில் இனப்படுகொலை விசாரணைக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் பெற்றது மற்றும் பன்னாட்டு நீதிபதிகளை அனுமதிக்காததற்கு தமிழர்களிடமிருந்து கண்டனங்கள் எழும் சூழலிலேயே லைக்காவின் இந்த விழாவை அரங்கேற்றுகிறது இலங்கை அரசு. எனவேதான் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாக வேல்முருகன் கூறியுள்ளார். ரஜினியின் அறிவிப்புக்கு அவர் நன்றியும் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்