முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாருக்கான் - ஜூகி சாவ்லாவுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      சினிமா
Image Unavailable

மும்பை : ஐ.பி.எல். பந்தய விவகாரத்தில் ரூ.73 கோடி மோசடி தொடர்பாக, நடிகர் ஷாருக்கான், அவருடைய மனைவி கவுரி, நடிகை ஜூகி சாவ்லா ஆகியோருக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது.

அன்னிய செலாவணி...

கடந்த 2008-ம் ஆண்டு, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் பந்தயங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து அமலாக்கப்பிரிவு விசாரிக்க தொடங்கியது. அப்போது, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் ரூ.73 கோடியே 60 லட்சம் அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

வழக்கு பதிவு

இதுதொடர்பாக அந்த அணியின் உரிமையாளர்களான நடிகர் ஷாருக்கான், அவருடைய மனைவி கவுரி, நடிகை ஜூகி சாவ்லா ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின் (பெமா) கீழ், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, ஷாருக்கான் உள்ளிட்ட 3 பேரிடமும் அமலாக்கப்பிரிவு அடிக்கடி விசாரணை நடத்தியது. வாக்குமூலத்தை பதிவு செய்தது. விசாரணை முடிவடையும்போது, ‘பெமா’ சட்டத்தின்படி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது வழக்கம்.

நோட்டீஸ் அனுப்பியது

அதன்படி, ஷாருக்கான், கவுரி, ஜூகி சாவ்லா மற்றும் நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அமலாக்கப்பிரிவு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி

இதுகுறித்து அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:-

நடிகர் ஷாருக்கான் தனது ரெட் சில்லிஸ் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ஐ.பி.எல். அணியை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2008-ம் ஆண்டு, நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற கம்பெனியை தொடங்கினார். அதன் இயக்குனராக ஷாருக்கான் மனைவி கவுரி இருந்தார். அந்த நிறுவனம் சார்பில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வாங்கப்பட்டது. அதன் உரிமையாளர்கள் ஷாருக்கான், ஜூகி சாவ்லா ஆகியோர் ஆவர்.

ரூ.2 கோடி கூடுதல் பங்குகள்

தொடக்கத்தில், அந்த கம்பெனியின் பங்குகள், ரெட் சில்லிஸ் நிறுவனத்திடமே இருந்தன. ஐ.பி.எல். பந்தயத்தின் வெற்றிக்கு பிறகு, நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் சுமார் 2 கோடி கூடுதல் பங்குகளை வெளியிட்டது. அவற்றில் 50 லட்சம் பங்குகள், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த தி சீ ஐலண்ட் நிறுவனத்துக்கும், 40 லட்சம் பங்குகள் நடிகை ஜூகி சாவ்லாவுக்கும் வழங்கப்பட்டன.

ரூ.73 கோடியே 60 லட்சம்....

அப்போது, ஒரு பங்கின் முகமதிப்பு ரூ.99 வரை இருந்தபோதிலும், வெறும் 10 ரூபாய்க்கு இவை வழங்கப்பட்டன. அதிலும், ஜூகி சாவ்லா தனக்கு கிடைத்த 40 லட்சம் பங்குகளை அதே மொரீஷியஸ் நிறுவனத்துக்கு ஒரு பங்கு ரூ.10 விலைக்கு விற்று விட்டார். இப்படி குறைந்த விலைக்கு விற்றதால், ரூ.73 கோடியே 60 லட்சம் அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்