முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டுள்ளதையொட்டி அங்கு பிரசாரம் களைகட்டத்தொடங்கியுள்ளது. இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்படுகிறது.

ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அ.தி.மு.க. அம்மா என்ற ஒரு பெயரிலும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா என்ற மற்றொரு பெயரிலும் இரு அணிகள்  போட்டியிடுகின்றன.

அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பாக டி.டி.வி.தினகரனும் அ.தி.மு.க. புரட்சி தலைவி  அம்மா கட்சி சார்பாக  மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. சார்பாக மருது கணேஷ், தே.மு.தி.க. சார்பாக மதிவாணனும், மக்கள் நல கூட்டணி சார்பாக ஒற்றுமை இல்லாததால் இடது கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மட்டும் லோகநாதனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர ஜெ.தீபா பேரவை சார்பாக தீபாவும் பாரதிய ஜனதா சார்பாக கங்கை அமரனும் போட்டியிடுகிறார்கள்.  நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை சார்பாகவும் போட்டியிடுகிறார்கள்.

வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி

ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்புமனுத்தாக்கலும் வேட்புமனு பரிசீலனையும் முடிந்துவிட்டது. மொத்தம் 82 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  வேட்புமனு வாபஸ் வாங்க இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 5 மணிக்கு களத்தில் மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். போட்டியிடும் வேட்பாளர்கள் 64 பேருக்கும் மேலாக இருந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறைதான் வாக்குப்பதிவின்போது பயன்படுத்த முடியும். 64 வேட்பாளர்களுக்கும் குறைவாக இருந்தால் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு பயன்படுத்தப்படும்பட்சத்தில் தாம் வாக்களித்த வாக்கு விரும்பிய வேட்பாளருக்கு கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு சீட்டு வழங்க இந்த தேர்தலில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு மற்றும் திரித்தம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரையொட்டி இந்த புதிய முறை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

தலைவர்கள் முற்றுகை

இந்தநிலையில் ஆர்.கே. நகரில் அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகையிடத்தொடங்கிவிட்டனர். இதனையொட்டி பிரசாரம் களை கட்டத்தொடங்கிவிட்டது. இந்த தொகுதியில் 60-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா, தி.மு.க., இடது கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., பாரதிய ஜனதா,ஜெ.தீபா பேரவை ஆகிய கட்சிகளுக்கிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அதிலும் அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா, தி.மு.க. ஆகிய கட்சிகளுடையே மிகக்கடுமையான போட்டி நிலவிகிறது.

வீடு வீடாக பிரச்சாரம் 

ஆர்.கே. நகரில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குகளை சேகரிக்க வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தெருத்தெருவாக பிரசாரம் செய்வதோடு வீடு வீடாகவும் சென்று வாக்காளர்களை நேரடியாக சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்.கே. நகர் தொகுதியில் குவிந்தவண்ணம் வருகிறார்கள். இதனால் தொகுதியில் பிரசாரம் களைகட்டத்தொடங்கியுள்ளது.

தினகரன்:-

அ.தி.மு.க. அம்மா அணி சார்பாக டி.டி.வி. தினகரன் கடந்த 23-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டார். அவரது வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. வேட்புமனுத்தாக்கல் செய்தவுடனேயே அவர் வீதி, வீதியாக பிரசாரம் செய்யத்தொடங்கிவிட்டார். அதோடுமட்டுமல்லாது அவர் சார்பாக 200-க்கும் மேற்பட்டவர்கள் பிரசார பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டதோடு அவர்கள் குழுக்களாக பிரிந்து அவருக்கு பிரசாரத்திற்கான உதவிகளை செய்து வருவதோடு அவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொகுதி முழுக்க இவர்கள்தான் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.

மதுசூதனன்:-

அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா சார்பாக போட்டியிடும் மதுசூதனன் ஆதரவாளர்களும் பிரசாரத்தை நேற்று தொடங்கிவிட்டனர். வண்ணாரப்பேட்டையில் தேர்தல் பிரசார பணிமனைக்கான பூமிபூஜையை ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கிவைத்தார். தண்டையார் பேட்டையில் உள்ள நாடரான் தோட்டத்தில் முதல் தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்தினர். இதில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செம்மலை, ம.பா.பாண்டியராஜன் உள்பட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். ஏற்கனவே தொகுதி முழுவதும் உள்ள முக்கிய தலைவர்களை மதுசூதனன் சந்தித்து பேசி தனக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இன்று முதல் அவர் தனது அணியின் மூத்த தலைவர்களுடன் தெரு தெருவாகச் சென்று பிரசாரம் செய்கிறார். மதுசூதனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

மருதுகணேஷ்:

தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் மருதுகணேஷ் அந்த தொகுதியை சேர்ந்தவராக இருப்பதால் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனே தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தொகுதியில் உள்ள முக்கிய பெரியோர்களை சந்தித்து அவர்களிடம் ஆசிபெற்று பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க. நிர்வாகிகளும் அவரது ஆதரவாளர்களும் நாளை முதல் தொகுதி முழுவதும் சென்று பிரசாரம் செய்ய தயாராகி வருகிறார்கள். நாளை தி.மு.க. வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மருதுகணேஷை அறிமுகம் செய்துவைத்து பேசுகிறார். அந்த கூட்டத்தில் தி.மு.க.வின் இதர தலைவர்களும் கலந்துகொண்டு பேசுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் சுப.வீரபாண்டியன், எர்ணாவூர் நாராயணன், பொன்குமார், எஸ்றா சற்குணம், செல்லமுத்து, திருப்பூர் அல்தாப், பார்வர்டு பிளாக் அம்மாவாசி, கதிரவன், அதியமான் ஆகியோரும் மருதுகணேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்கள்.

கங்கை அமரன்:

பாரதிய ஜனதா சார்பாக போட்டியிடும் கங்கை அமரன் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை செளந்தராசன் பிரசாரம் செய்து வருகிறார். இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு ஆதரவாக பா.ஜ.கட்சியின் இதர தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இடதுகம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதனுக்கு ஆதரவாக அந்தக்கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நாம் தமிழர், தே.மு.தி.க. கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தீபா:

ஜெ.தீபா பேரவை சார்பாக போட்டியிடும் தீபா தனது பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். இன்றுமாலை தண்டையார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் தெருவில் இருந்து தீபா பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள்.

ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், ஆதரவாளர்களும் குவிந்து வருவதால் பிரசாரம் களைகட்டத்தொடங்கிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்