முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகிரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொதுக்கிணற்றை தூர்வாரும் இளைஞர்கள்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      ஈரோடு

சிவகிரி மார்ச் 28 -ஈரோடு மாவட்டம் சிவகிரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொதுக்கிணற்றை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தூர் வாரினார்கள். கடும் வறட்சியிலும் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வருகிறது.கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் தற்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் வறட்சி நிலவுகிறது. அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டது. இதனால் மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வற்றாத ஜீவநதிகள் மணல் பரப்புகளாக கானல் நீரை கக்கி கொண்டிருக்கின்றன.தண்ணீரின்றி விவசாயம் முற்றிலும் முடங்கி விட்டது. பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் குடங்களை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு இடமாக அலைகிறார்கள். அதுவும் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். 1000 அடி, 2 ஆயிரம் அடி என ஆயிரக்கணக்கான அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டும் தண்ணீருக்கு பதிலாக வெறும் காற்றுத்தான் வருகிறது. கடும் வறட்சியிலும் 25 அடியிலேயே கிணற்றில் இருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வருகிறது என்றால் ஆச்சரியம் அல்லவா. இந்த ஆச்சரிய சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடந்து உள்ளது.

100 ஆண்டுகள்

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் புதிய பஸ் நிலையம் அருகே குமரன் தெருவில் பொதுக்கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்கு நந்தவன கிணறு என்ற பெயரும் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிணறுதான் அந்த ஊர் மக்களுக்கு தண்ணீரை வழங்கி வந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்கள் அந்த கிணற்றை குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். பின்னர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வீதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து இந்த கிணற்றின் பயன்பாடு குறைய தொடங்கியது. இதனால் கிணற்றை சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தன. அடர்ந்த முட்புதர்கள் உருவாகின. இதனால் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததுடன், குப்பைகளும் கிணற்றில் விழுந்தன. இதன்காரணமாக கிணறு தனது பொழிவை இழந்தது. இதனால் 60 அடி ஆழமுள்ள கிணறு 20 அடி ஆழமுள்ள கிணறாக மாறியது. பின்னர் இந்த கிணற்றை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. எனினும் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது.

. 30 ஆண்டுகளுக்கு முன்பு

தற்போது சிவகிரி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்க வில்லை. அப்போதுதான் அங்குள்ள இளைஞர்களுக்கு ஊரில் உள்ள நந்தவன கிணறு நினைவுக்கு வந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சிவகிரியில் உள்ள அனைவருக்கும் தண்ணீர் வழங்கிய அந்த கிணற்றை தூர் வாரினால் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இளைஞர்களுக்கு துளிர்த்ததுஇந்த நம்பிக்கையை செயல்படுத்த இளைஞர்கள் எண்ணினார்கள். இந்த பணியை சிவகிரியில் உள்ள சுதந்திர சிறகுகள் என்ற அமைப்பு முன்னெடுத்து சென்றது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் முதலில் பொதுக்கிணற்றை சுற்றி உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அகற்ற தொடங்கினர். தினமும் 10 இளைஞர்கள் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.

 தண்ணீர் ஊற்றெடுத்தது

இந்த பணியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும் ஈடுபட்டனர். மேலும் இளைஞர்களுக்கு தேவையான உணவு, குளிர்பானம், டீ போன்றவற்றையும் பொதுமக்கள் வழங்கினார்கள். கிண்றை சுற்றிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள், முட்புதர்கள் போன்றவற்றை அகற்றிய பிறகு கிணற்றில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிணற்றில் உள்ள குப்பைகளை அகற்றியபோது அதில் தண்ணீர் ஊற்றெடுக்க தொடங்கியது. இதை கண்டதும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் தங்களுடைய நம்பிக்கையை இழக்காமல் குப்பை மற்றும் அங்கிருந்த சகதியை தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது 5 அடி ஆழத்துக்கு தூர்வாரப்பட்டு உள்ளது. கிணற்றில் இருந்து தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து வருகிறது. அதாவது கிணற்றின் மேல் மட்டத்தில் இருந்து 25 அடி ஆழத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. ஆயிரக்கணக்கான அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்தும் தண்ணீர் வராமல் உள்ள இந்த வறட்சியில் 25 அடி ஆழத்தில் தண்ணீர் ஊற்றெடுத்து உள்ளது அந்த பகுதி பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்து உள்ளது.

பாராட்டு

தண்ணீர் ஊற்று அதிகமாக இருந்ததை தொடர்ந்து அதில் இருந்த தண்ணீர் ‘ஆயில் என்ஜின்’ மூலம் உறிஞ்சிப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிவகிரி பகுதி இளைஞர்கள் கிணற்றை தூர்வாரும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கிணற்றில் இருந்து ஊறும் தண்ணீர் மாசுபட்டு உள்ளது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கோடை காலம் நெருங்க உள்ளது. எனவே கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பேரூராட்சி நிர்வாகம் இந்த கிணற்றை தூர் வாரி நீர் மேலாண்மை செய்தால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும்’, என்றனர். இளைஞர்களின் இந்த முயற்சியை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago