முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கமிஷன்களில் காலியிடங்களை நிரப்பக்கோரி பார்லி.யில் எதிர்க்கட்சிகள் அமளி

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அரசியல் சட்ட அதிகாரம் உள்ள தேசிய கமிஷன்களில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபையில் நேற்று 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனையொட்டி நேற்று பல முறை சபை ஒத்திவைக்கப்பட்டது.

ஆதிதிராவிடர்கள், மலைசாதியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையிர் நலனுக்கான தேசிய கமிஷன்கள் உள்ளன. இந்த கமிஷன்கள் அரசியல் சட்ட அதிகாரம் உள்ளவைகள். இந்த கமிஷன்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிரப்பப்படாமல் காலி இடங்கள் உள்ளன. இவைகள் நிரப்பப்படாமல் காலதாமதம்  செய்யப்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். 

இந்த பிரச்சினையை பாராளுமன்ற ராஜ்யசபையில் நேற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்து உறுப்பினர்கள் எழுப்பினர்.
நேற்றுக்காலை சபை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து சபை விதி 267-ன் கீழ் பல்வேறு நோட்டீசுகளை கொடுத்துள்ளோம். அதனால் சபை நடவடிக்கைகளை ஒதுக்கிவிட்டு நாங்கள் கொடுத்துள்ள நோட்டீசுகள் தொடர்பாக விவாதங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரினர்.

சமாஜ்வாடி:

சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த உறுப்பினர் ராம்கோபால் யாதவ் எழுந்து ஆதிதிராவிடர், மலைசாதியினர், பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர்களுக்கான தேசிய கமிஷன் தலைவர்கள், துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் பதவிக்கு காலியாக உள்ள இடங்கள் இன்னும் நியமிக்கப்படாமல்  இருக்கிறது. இதனால் இந்த கமிஷன்கள் மூலம் மக்கள் நிவாரணம் கேட்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து சில சாதியினர்களை நீக்க சதி நடக்கிறது. அரசு துறைகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது ஏன் என்றும் கேட்டார்.

மாயாவதி:

பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எழுந்து பேசுகையில் இந்த தேசிய கமிஷனில் காலியாக உள்ள இடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து சபையின் மையப்பகுதிக்கு சென்று அரசு பொய் சொல்கிறது என்றும் சபைக்கு தவறான வழி காட்டப்படுகிறது என்றும் கூச்சலிட்டதால் மதிய உணவுக்கு முன்பு சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. சபை கூடியதும் குறுக்கிட்டுப்பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, அனைத்து தேசிய கமிஷன்களும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என்றும் கூறினார். சபையில் இருந்த துணைத்தலைவர் பி.ஜே.குரியன் தலையிட்டு பேசுகையில், காலியாக உள்ள இடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று கூறி சபையில் அமைதியை ஏற்படுத்த முயன்றார். அப்போது அமைச்சர் வெங்கையா நாயுடு குறுக்கிட்டு காலி இடங்கள் உரிய நேரத்தில் நிரப்பப்படும் என்றார்.

அரசுக்கு எதிராக கோஷம்:

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நேற்றுக்காலையில் முதல் தடவையாக 10 நிமிடம் சபையை குரியன் ஒத்திவைத்தார். சபை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால் சபை நேற்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.  சபை மதியத்திற்கு மேல் கூடியது அப்போதும்  கூச்சல் குழப்பம் தொடர்ந்ததால் சபையை 30 நிமிட நேரம் சபையின் தலைவர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார். முன்னதாக சபையில் ஒரு கட்டத்தில் அமைச்சர் வெங்கையா நாயுடு பதில் கூற எழுந்தபோது  எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். ஆனால் சபையில் இருந்த துணைத்தலைவர் குறுக்கிட்டு பதில் கூற அமைச்சருக்கு உரிமை உண்டு. அதனால் வெங்கையாநாயுடு பேச குரியன் அனுமதி அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக கோஷம்போட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்