முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டுமொத்த காற்றோட்டத்தில் மாறுபாடு உலகில் வெப்பம், வெள்ளம் அதிகரிக்கும் : சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

பென்சில்வேனியா  - பருவ மாற்றம் ஒட்டுமொத்த புவியின் காற்றோட்டத்தில் மாறுபாட்டை ஏற்படுத்திவிட்டது. இதனால் வருங்காலங்களில் அளவுக்கு அதிகமான வெப்பம், வறட்சி, வெள்ளம் ஏற்படலாம் என சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மனிதர்களால் உண்டான புவி வெப்பமயமாதலால் புவி காற்றோட்டத்தின் வேகமும், பருவங்கள் மாறுவதும் குறைந்து வருகிறது. இதன் விளைவுகள் வருங்காலத்தில் படுமோசமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், கடுமையான வறட்சி, அளவுக்கு அதிகமான வெப்பம், வெள்ளம் ஏற்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

பூமத்திய ரேகைக்கும், ஆர்க்டிக் பகுதிக்கும் இடையே நிலவும் தட்பவெப்பத்துக்கு இந்த காற்றோட்டம்தான் காரணம். இந்த காற்றோட்டம் பூமியை வட்டமாக சுற்றி, ஆர்க்டிக் பகுதியில் இருந்து வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சி பிற பகுதிகளில் சேர்த்து வருகின்றன. அதில்தான் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

டாக்டர் மைக்கேல் மன்  எச்சரிக்கை
இது குறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் மைக்கேல் மன் கூறியபோது, ‘‘கடந்த 2016-ல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கலிபோர்னியாவில் வறட்சி ஏற்பட்டது. அதேபோல் 2011-ல் அமெரிக்காவில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. 2010-ல் பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இவை அனைத்துமே பருவமாற்றத்துக்கான கவலையை ஏற்படுத்துகின்றன’’ என்றார்.

வெப்பமயமாதலைத் தடுக்க வேண்டும்
உலகின் மற்ற பகுதிகளைவிட ஆர்க்டிக் பகுதியில் வெப்பம் வேகமாக அதிகரித்து வருகிறது. அதற்கு மாறாக பூமத்திய ரேகையில் வெப்பம் குறைந்து வருகிறது. இந்த மாற்றங்களும் புவியின் காற்றோட்ட நகர்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 40 ஆண்டுகாலமாகவே பருவநிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்து வருவதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே மனிதர்களால் ஏற்படும் புவி வெப்பமயமாதலைத் தடுக்க வேண்டும், பசுமைக் குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்