முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாதி, மதத்தின் பெயரை கூறி ஓட்டு கேட்க கூடாது தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜாதி, மதத்தின் பெயரை கூறி ஓட்டு கேட்க கூடாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நெறிமுறைகள் வகுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நெறிமுறைகள் வகுத்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேர்தல் விதிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும், வேட்பாளர்களின் பெயர்கள் முறையாக மனு செய்த வேட்பு மனு பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க வேண்டும், வேட்புமனு வாபஸ் பெறப்படவில்லையெனில், போட்டியிடும் நபர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் பெயர் உள்ளதா என சரி பார்க்க வேண்டும்.தேர்தல் நடக்கும் கால நேரத்தை அறிய வேண்டும். தேர்தல் முகவரை முறையாக மற்றும் முன்னதாக நியமிக்க வேண்டும். தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டவர் தகுதி உடைய நபரா என சரிபார்க்க வேண்டும்.வாக்குச்சாவடி பட்டியலை சரிபார்க்க வேண்டும். வாக்குச்சாவடி முகவரை முறையாக மற்றும் முன்னதாக நியமிக்க வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் நகலை அளிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவரை முறையாக மற்றும் முன்னதாக நியமிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்.சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் விதிமீறல்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் நடத்தும் கூட்டங்களில் பங்கு கொள்ள வேண்டும். தேர்தல் செலவு கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும்.வேட்பாளர் பெயர், கட்சி சின்னம் பொறித்த பூத் சிலிப் வழங்கக்கூடாது, வாக்காளர்கள் அல்லது வேட்பாளர்களுக்கு பரிசளிப்பதோ வாக்களிக்கவிடாமல் தடுப்பதோ அல்லது வேறு ஏதேனும் தூண்டுதலோ செய்யக்கூடாது.

வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ தடுக்க கூடாது.சாதி, மத, இன அடிப்படையில் வாக்களிக்கவோ, வாக்களிக்க மறுக்கவோ கோரக் கூடாது. சாதி, மத, இன மற்றும் தேசிய சின்னங்களை பிரசாரத்தில் உபயோகம் செய்யக் கூடாது. சாதி, மத, இன, மொழி அடிப்படையில் உணர்வுகளை தூண்டக் கூடாது. ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட குணநலன்களை குறித்து தவறான அறிக்கை அளிக்க கூடாது. வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்ல வாகனங்களை அமர்த்தக் கூடாது, தேர்தல் செலவிற்கான உச்ச வரம்பை மீறக்கூடாது.அரசு ஊழியர்களின் ஆதரவை கோரக்கூடாது. வாக்குச்சாவடி மையங்களில் தவறாக நடந்து கொள்ளக் கூடாது.

தேர்தல் நாளுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் எவ்வித பிரசாரமும் மேற்கொள்ளக்கூடாது. மற்ற கட்சியினர் நடத்தும் கூட்டத்தில் பிரச்சினை ஏதும் செய்யக்கூடாது. தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடி மையத்தின் அருகில் பிரச்சாரம் செய்யக்கூடாது. பிரசுரங்களை வெளியிடுபவர் பெயர், முகவரி மற்றும் அச்சு செய்பவர் பெயர், முகவரி இல்லாமல் தேர்தல் பிரசுரங்கள் அச்சடிக்கக்கூடாது.எந்தவொரு வேட்பாளர், வாக்காளர் அல்லது எந்தவொரு நபர்களையும் பயமுறுத்தக் கூடாது. தேர்தலின்போது ஆள் மாறாட்டம் செய்யவோ அல்லது அதற்கு துணை போகவோ கூடாது. தேர்தல் முடிவுகள் வெளியான 30 தினத்தில் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தவறக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்