முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முரளி விஜய்யை திட்டிய விவகாரம்: ஸ்டீவ் ஸ்மித் மன்னிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது நிகழ்ந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தன்னுடைய உணர்ச்சிவசத்தால் நிகழ்ந்து விட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சம்பவம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகனாக 25 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சில சர்ச்சைக்குரிய சம்பவங்களில் மாட்டிக் கொண்டார். குறிப்பாக நேற்று முன்தினம் ஆட்டத்தின் போது, இந்திய வீரர் அஸ்வின் ஓவரில் ஹாசல்வுட் அடித்த பந்தை ‘கல்லி’ பகுதியில் நின்ற முரளிவிஜய் ‘கேட்ச்.’ செய்தார். அப்போது பந்து தரையில் பட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து 3-வது நடுவரிடம் நாடப்பட்டது.

விஜய்யை திட்டிய ஸ்மித் ...

டெலிவி‌ஷன் ரீபிளேயில் பந்து லேசாக தரையில் பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 3-வது நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்தார். முரளி விஜய் தரையில் பந்து பட்டதை கேட்ச் பிடித்து அவுட் கேட்டதால் வீரர்கள் அறையில் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் ஆவேசம் அடைந்தார். அவர் முரளி விஜய்யை நோக்கி கெட்ட வார்த்தையை சொல்லி மோசடி என்று கூறி திட்டினார். சுமித் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சத்தம் போட்டது கேமிராவில் பதிவாகி இருந்தது.

டி.ஆர்.எஸ். சர்ச்சை

அதேபோல், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது எல்.பி.டபில்யூ மூலம் அவுட் ஆனார். ஆனால், நடுவர்களிடம் ரிவிவ்யூ கேட்கலாமா? என்பதை டிரெஸ்ஸிங் ரூமை நோக்கி ஆலோசனை கேட்டார். கிரிக்கெட் விதிகளின் படி இது பெரிய தவறு என்பதால், இவ்விவகாரம் பெரிதாக வெடித்தது.  மன்னிப்பு கோரினார்

இந்நிலையில், இது குறித்து நேற்று பேசிய ஸ்மித் ,” அந்த சூழ்நிலைகளில் உணச்சிவசப்பட்டு சில செயல்களை செய்து விடுகிறேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கான காரணம். உமேஷ் யாதவ் சிறப்பான முறையில் பந்து வீசி எங்களை கட்டுப்படுத்திவிட்டார். எங்களைப் பொறுத்தவரை இது மிகவும் கடினமான தருணம், இந்த தொடரை 4-0 என்றச் கணக்கில் இந்தியா வென்றுவிடும் என்பதே அனைவரின் கணிப்பாக இருந்தது. ஆனால், நாங்கள் அவர்களுக்கு கடும் சவால்களை அளித்தோம். இது எங்களுக்கு பெருமையே” என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்