முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் 58 பணிகள் ரூ.4 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன : செய்தியாளர்கள் சுற்றுப் பயணத்தில் கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் 58 பணிகள் ரூ.4 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன என செய்தியாளர்கள் சுற்றுப் பயணத்தில் பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் பயணம்

திருச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் மணச்சநல்லூர் வட்டம், சாந்தப்பாடி பெருவளைவாய்க்கால், இலால்குடி வட்டம், பூவாளுர் கிராமத்திற்குட்பட்ட மாதானம் ஏரியில் வழங்குவாய்க்கால் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்ததாவது:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள நீர்வள ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி வறட்சியினை எதிர்கொள்ளவும், மழை நீரை திறம்பட சேமித்தும், புதிய நீர்வள ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நடப்பு நிதியாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்கால் மற்றம்; கால்வாய்களில் களைகள், முட்செடிகள் மற்றும் அடர்ந்த சிறு செடிகளை அகற்றுதல், ஏரிக்கரைகளைப் பராமரித்தல், வரத்துவாய்க்கால், கால்வாய்கள் மற்றும் ஏரி மதகுகளில் படிந்துள்ள மண்படிமானங்களை நீக்குதல், மழை மற்றும் கால்நடைகளால் ஏற்பட்ட மேடு பள்ளங்களைச் சமன் செய்தல், மதகுகள், அடைப்பான்கள், மிகை நீர் கலிங்குகள், குறுக்கு கட்டுமான அமைப்புகள் ஆகியவற்றைச் சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், வரும் நிதியாண்டுகளில் குடிமராமத்துப் பணிகள் நபார்டு நிதியதவியுடன் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாசன கட்டமைப்புகளான மதகுகள், மிகை நீர் கலிங்குகள், குறுக்கு கட்டுமான அமைப்புகள் ஆகியவற்றை மறுகட்டுமானம் செய்தல், ஏரிகளை தூர்வாரி அதன் முழு கொள்ளளவை மீட்டெடுத்தல், ஏரிக்கரைகளைப் பலப்படுத்துதல், தரப்படுத்துதல் ஆகிய பெரும்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் ஒரு பகுதியாக முதற்கட்டமாக பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்க குடிமராமத்து திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 30 மாவட்டங்களில் 1519 பணிகள் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு ஒப்புதல் வழங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் நீர்வள ஆதாரத்துறை மற்றும் அரியாறு வடிநில கோட்டத்தின் சார்பில் 58 பணிகள் 4 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாருதல் வழங்குவாய்க்கால் தூர்வாருதல், ஏரிக்கரை பலப்படுத்துதல், மடை பராமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள், கலிங்கு பாரமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள், மதகு பாரமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள் ஆகிய பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் 27.75 இலட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், திருவெறும்பூர் வட்டத்தில் 19.80 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், இலால்குடி வட்டத்தில் 19.85 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், துறையூர் வட்டத்தில் 76.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 9.2 இலட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், முசிறி வட்டத்தில் 27.50 இலட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், மற்றும் மணப்பாறை வட்டத்தில் 44.4 இலட்சம் மதிப்பீட்டில் 5 பணிகளும் செயலாக்கத்தில் உள்ளது. இப்பணிகளில் 10 பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. எஞ்சியுள்ள பணிகள் வரும் மே – 2017இல் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மாடக்குடி, சாந்தப்பாடி வாளக்குறிச்சி கிராமம், பழைய பெருவளை வாய்க்கால் மைல் 0,0 முதல் 1,2 வரை உள்ள பிரிவு வாய்க்கால்களை குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ.5.50 இலட்சங்கள் மதிப்பீட்டில் பணிகள் துவங்;கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலணை அகண்ட காவிரியில் இடது கரையிலிருந்து பெருவளை வாய்க்கால் பிரிகின்றது. பெருவளை வாய்க்கால் மைல் 13,1 பழைய பெருவளை வாய்க்கால் பிரிகின்றது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 4.00 கி.மீ ஆகும். இவ்வாய்க்கால் ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு, மேலணையின் பாராமரிப்பில் உள்ளது.

பெருவளை வாய்க்கால் மைல் 15.4-ல் இரத்தனக்குடி அணைக்கட்டிலிருந்து கீழ்பெருவளை வாய்க்கால் பிரிகிறது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 14.80கி.மீ ஆகும். கீழ்பெருவளை வாய்க்கால் மைல் 5.6 ல் மாதானம் ஏரி வாய்க்கால் பிரிகிறது. கீழ்பெருவளை வாய்க்கால் வலது கரை மைல் 5,2ல் பிரியும் பல்லவரம் பெரிய மதகு வாய்க்கால் மூலம் 614.13 ஏக்கர் நிலங்களும், வலது கரை மைல் 5,6ல் பிரியும் மாதானம் வழங்கு வாய்க்கால் மூலம் 208.43 ஏக்கர் நிலங்களும், எல்லையம்மன் கோவில் வழங்கு வாய்க்கால் மூலம் 25.03 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன. இவ்வாய்க்கால் மூலம் திருமணமேடு, தண்டங்கோரை, பம்பரம்சுத்தி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றது.

இவ்வாய்க்கால்களில் கடந்த காலங்களில் பெய்த மழையினாலும், வெள்ளத்தினாலும் வடிகால் கரையில் உள்ள மண் அடித்து சென்று வடிகால் மேடிட்டு மண்திட்டுகள் மற்றும் ஆங்காங்கே காட்டாமணக்கு செடிகள், அல்லிக்கொடிகள் படர்ந்து நீரோட்டத்திற்கு இடையூறாக உள்ளன. இதனால் நீர்த்தேக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள பாசன நிலங்களை மூழ்கடித்து சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனை சீரமைக்க இப்பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது இலால்குடி ஆற்றுப் பாதுகாப்பு உபகோட்ட உதவிப் செயற்பொறியாளர் ஆர்.வெங்கடேஷ், மேலணை, ஆற்றுப்பாதுகாப்பு பிரிவு இளம் பொறியாளர் சு.தனசேகர், இலால்குடி ஆற்றுப்பாதுகாப்பு பிரிவு, உதவி பொறியாளர் த.தர்மலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்