முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் கணேஷ் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைத்துறையின் சார்பில் நேற்று(28.03.2017) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தினை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தலைமையேற்று துவக்கிவைத்து பேசியதாவது:-

 

விவசாயிகள்

 

விவசாயிகள் குறைகளை மனுக்களாக பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வுகாண விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிரதி மாதம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கிணறு ஆழப்படுத்துதல் கோரியும், உலர்களம் அமைக்க கோரியும், என வரப்பெற்ற 37 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்பாண்டு நெல் 68167 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 3253 எக்டர் பரப்பளவிலும், பயறுவகை பயிர்கள் 5228 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்துப் பயிர்கள் 9760 எக்டர் பரப்பளவிலும், கரும்பு 3202 எக்டர் பரப்பளவிலும், தென்னை 9387 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 198.522 மெ.டன் நெல் விதைகளும், 15.755 மெ.டன் பயறு விதைகளும், நிலக்கடலை 11.030மெ.டன், சிறுதானியங்கள் 0.15 மெ.டன் தற்சமயம் இருப்பில் உள்ளது. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்று சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் கிடைக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 3106 மெ.டன்னும், டிஏபி 1241மெ.டன்னும், பொட்டாஷ் 968 மெ.டன்னும், 1687 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்து வரப்படுகிறது. மாற்றுப் பயிர் திட்டத்தின் கீழ் பாசன வசதியுள்ள இடங்களில் விவசாயிகள் குறைந்த வயது மற்றும் குறைந்த நீர்தேவையுள்ள உளுந்து மற்றும் மக்காச்சோளப் பயிர்களை மாற்றுப் பயிர்களாக அதிகளவில் சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயறு சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் பயறு வகை பயிர்களுக்கு தெளிப்பு நீர்பாசனகருவியும், மழைதூவான் கருவியும் சிறு குறு விவசாயிகளுக்கு 100சதவீத மானியத்தில் இதர விவசாயிகளுக்கு 75சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. எனவே பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன் அடையக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், எண்ணெய், பனை மற்றும் தென்னை மரங்களுக்கு சொட்டு நீர் பாசனமும், பயறு வகை பயிர்கள் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனமும் மற்றும் மழை தூவான் பாசன கருவிகளும் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும்இதர விவசாயிகளுக்கு 70 சதவீது மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை விவசாய மையங்களை தொடர்பு கொண்டு நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பங்கு பெற்று பயன அடையக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல்-ஐஐ மற்றும் ரபி பருவ பயிர்களான சிறுதானியங்கள், உளுந்து, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு பயிர்களுக்கு 170680.85 ஏக்கர் பரப்பிற்கு 83848 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். நெல் -ஐஐ பயிரை பொறுத்தவரை பயிர் அறுவடை பரிசோதனை அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டு படிவங்கள் புள்ளியியல் துறைக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், பேசினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அண்ணாமலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் மிருணாளினி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்