முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீரர் சத்தியமூர்த்தி நினைவு தினக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-   தியாகதீபம் பேரவை சார்பில் தீரர் சத்தியமூர்த்தி75 ஆம் ஆண்டு நினைவு தினக் கூட்டம் டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் அமைப்பாளர் அ.பாலு தலைமையில் நடைபெற்றது. ஜெ.ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.
  கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் “சொல்செம்மல்” என்ற தலைப்பில் பேசுகையில் நெற்றி நிறையத் திருநீறு, குங்குமம், தலையில் காந்தி குல்லாய், கோட், அங்கவஸ்திரம் இவற்றுடன் சிம்மக் குரல் கேட்கிறது என்றால், தீரர் சத்தியமூர்த்தி பேசுகிறார் என்று தெரியும். தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் சத்தியமூர்த்தி சட்டசபையில் மதுவிலக்கு, தீண்டாமை, நிற பேதம், சமூக ஏற்றத்தாழ்வுகள், மக்களின் அடிப்படை வசதிகள், பெண் கல்வி, பெண்ணுரிமை எனப் பல செய்திகளை விவாதித்து அலசியிருக்கிறார். பாரதியாரின் கவிதை நூல்களை அரசு தடை செய்தபோது, 1.10.1928ல் இவர் பேசிய பேச்சு சட்டசபை வரலாற்றில் தனித்த சிறப்புடையது. பாரதி பாடல் எழுதிய ஏட்டை எரிக்கலாம். அதைப்பாடும் வாயை, கேட்டவர் மனத்து உணர்வை என்ன செய்ய முடியும்? என்றார். காந்தியடிகள் இது போன்ற பல சத்திய மூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் என்றோ நாட்டை விட்டு ஓடியிருப்பர் எனப் புகழ்ந்தார்.
  அன்றும் சிலர் இவரது உண்மைப் புகழை மறைக்க முயன்றனர். 6.11.1939 சென்னை மேயராகப் பொறுப்பேற்று முதல் குடிமகன் என்பதற்குப் பதிலாக முதல் சேவகன் என்று தன்னை அழைத்துக் கொண்டார். தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இவரும் உதவினார். இந்தச் சொல்லரசர் ஒரு துறையிலா சாதனை செய்தார்? ஒரு நாளில் 24 மணி நேரம் போதாது என உழைத்திருக்கறாரே! கொண்ட கடமையில் தூங்கியவர் புகழ் இழந்தார் என்றார் பட்டுக்கோட்டையார். இந்தப் புதுக்கோட்டையார் வாழ்வே புகழ்க் கோட்டைதான் என்றார்.
  கூட்டத்தில் கவிஞர் மு.வீரமணி, வீ.ராஜமாணிக்கம், ரெ.கார்த்திகேயன், முனைவர் கே.ரெங்கநாதன், கவிஞர் மு.முருகேசன், சு.பாலகிருஷ்ணன், வண்டியூர் மாணிக்கராஜ், நவாப்ஜான், ஏ.சி.பாபுலால் கலந்து கொண்டனர். பி.பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்