முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் குழப்பமோ - அவசரமோ இல்லை : மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் அவசரமோ, குழப்பமோ இல்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு.,

ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் மக்களின் பேராதரவோடு 2011-ம் ஆண்டில் பதவியேற்ற ஜெயலலிதா அரசு மாணவர் நலன் கருதி பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த ஐந்தாண்டுகளில் 74,316 ஆசிரியர்களை நியமனம் செய்து அவர்தம் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்துள்ளது. வெற்றிடத்தை நோக்கி காற்று விரைந்து சென்று நிரப்புவது போல ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் அவ்வப்போது உடனடியாக நிரப்பும் பணியினை அம்மா தலைமையிலான அரசு மேற்கொண்டு வந்துள்ளது.

வரலாற்று சாதனை
மேலும் இந்த அரசு கடந்த ஆறு ஆண்டுகளில் 1,10,323 கோடி ரூபாய் பள்ளிக்  கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. நடப்பு  2017-18ம் ஆண்டில் பள்ளிக் கல்விக்கென 26,932 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு விருப்பத்தோடு வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் அவர்கள் பயன்பெறும் வண்ணம் புத்தகப்பைகள், காலணிகள், கிரையான், வண்ணப் பென்சில், பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகங்கள், புவியியல் வரைபட நூல், கணித உபகரண பெட்டி, மடிக்கணினி, மலைப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கம்பளிச் சட்டை அனைத்தையும் வழங்கி எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனையை புரட்சித் தலைவி அம்மாவின் அரசு செய்துள்ளது.

தேர்வு நடத்துவதில்...
பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் மகிழத்தக்க வகையில் வெளிப்படைத் தன்மையுடன் இத்துறை செயல்பட்டு வருவது மட்டுமல்ல கல்வித்தரத்தை மென்மேலும் உயர்த்த வரும் கல்வியாண்டு முதல் புதிய பாட திட்டங்களை அறிமுகப்படுத்தவும் உள்ளது. தமிழகக் கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பலவற்றை அண்டை மாநிலங்களும் பயன்படுத்துகிற நிலை உள்ளது. இதனை பொறுக்க முடியாத சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் பெரும் குழப்பம் உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதிப்பெண்கள் தளர்வு ...
இந்த அறிக்கையில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படவில்லை எனவும் தற்போது அவசர அவசரமாக ஆசிரியர் தகுதித்  தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆசிரியர்  தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற தேர்வு எழுதிய அனைத்துப் பிரிவினரும் 60 விழுக்காடு பெற வேண்டும் என முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சமூகநீதியை நிலைநிறுத்தும் வண்ணம் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் புரட்சித் தலைவி அம்மா தலைமையிலான அரசு இப்பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு 5 விழுக்காடு மதிப்பெண்களை தளர்வு செய்து, தேர்ச்சி பெறத் தேவையான தகுதி மதிப்பெண்களை 55 விழுக்காடாக குறைத்து 06.02.2014 அன்று ஆணை வழங்கியது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ...
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த இயலாத  சூழல் இருந்து வந்தது. தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக உச்சநீதி மன்றத்தில் இருந்த வழக்கு 09.11.2016 அன்று முடிவுக்கு கொண்டு  வரப்பட்டதாலும், சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தகுதித் தேர்வினை 2017   ஏப்ரல் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என மற்றொரு வழக்கில் ஆணை வழங்கியதாலும், வரும் ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 24.02.2017ல் அறிவிக்க வெளியிடப்பட்டது. மேலும், வரும் கல்வியாண்டு ஜூன் மாதம் 1-ம் தேதியன்று  தொடங்க இருப்பதால் அதற்குள் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப  வேண்டிய நிலை உள்ளதாலும் மேற்கண்ட தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

அறிக்கையை தவிர்க்க வேண்டும்
பணிநாடுநர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தயாரிப்பு பணியினை மேற்கொள்ள போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ஏறத்தாழ 10 இலட்சம் இளைஞர்கள் முனைப்போடு தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை குழப்பும் வகையில் எதிர்கட்சித் தலைவர் அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கையில் சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களை பற்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் எழாது என்பதும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் பாடங்களை பயின்றுள்ள பணி நாடுநர்கள் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும்.

தி.மு.க. எந்த நடவடிக்கையும் ...
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 2009ம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை  ஆட்சியில் இருந்த அன்றைய திமுக அரசு இந்த சட்டத்தை செயல்படுத்த எந்த  நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது வருத்ததிற்குரியதாகும். 2011ல் மக்களின்  பேராதரவுடன் ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் தலைமையிலான  அரசுதான் இச்சட்டத்தினை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை வெளியிட்டு அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசாணைகள் வெளியிட்டது மட்டுமின்றி நாட்டிலேயே இச்சட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்திடும் மாநிலம் தமிழ்நாடுதான் என்ற பெருமையும் கிட்டியது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் நலன், சிறுபான்மையினர் பள்ளிகளின் நலன், படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் பணிநாடுநர் நலன், ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டே தற்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப் பட்டுள்ளது. இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் இதுபோன்ற அறிக்கையினை எதிர்க் கட்சி தலைவர் வெளியிட்டுள்ளது மிகுந்த வருத்தத்ததையும், மன வேதனையையும் தருகிறது. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்