முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் யுகாதித் திருநாள் விழா

புதன்கிழமை, 29 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

மதுரை. கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் யுகாதித் திருநாள் விழா டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் செயலாளர் மலரகம் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் “உன்னதமொழி” என்ற தலைப்பில் பேசுகையில்  உகாதி / யுகாதி புத்தாண்டு உகாதி என்ற சொல் “யுகா” என்ற வடமொழி சொல்லிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது. இந்த நாளில் புதிய செயல்கள் செய்ய நல்ல நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் வசந்தகாலத்தின் பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

 “செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்றான் பாரதி. மொழிகளால் இந்தியர் இதயங்களைப் பிரிக்க முடியாது என்றவன் அவன். சுந்தரத் தெலுங்கு என தெலுங்கு மொழியின் இனிமையை பாராட்டியவன் பாரதி. “தெலு” என்றால் வெண்மை என்று பொருள், எனவே வெண்மையான மக்கள் என்ற பொருளில் தெலுங்கு தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. நிலையான போரில்லாத ஒரு நீண்டகால அரசை மக்களுக்கு அளித்தார் மன்னர் திருமலை நாயக்கர். குவிந்த  செல்வத்தை கோயில்களாகவும் ஏரிகளாகவும் மாற்றினார் திருமலை மன்னர். நூற்றுக்கணக்கான கோயில்களை புதுப்பித்துக் கட்டி பெரும் கோபுரங்களை எழுப்பியிருக்கிறார். அவை ராய கோபுரங்கள் எனப்படுகின்றன. பதினேழு வருடம் ஆட்சி செய்த ராணி மங்கம்மாள் அதிகம் போர்கள் செய்ததில்லை. படையெடுப்புகளை திருமலை மன்னரின் பெரும் செல்வத்தை திறையாகக் கொடுத்தே சமாளித்தாள். ஆனால் தென்னாட்டை போரில்லாது காத்தாள். அதனால் செல்வம் பெருகியது. ராணி மங்கம்மாள் அதிகமும் கோயில்கள் கட்டவில்லை. ஆனால் சாலைகள் அமைக்கவும் சந்தைகள் உருவாக்கவும் பெரும் செலவு செய்தாள்.

 உகாதி பானாக்கம் : பானாக்கம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக் கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். கோடைகாலத்தில் உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம். உகாதி நாளன்று இந்த பானம் செய்யப்பட்டு விருந்தினர்களுக்கு அளிக்கப்படுவது சிறப்பம்சமாகும். உகாதி விருந்தில் இடம் பெரும் முக்கிய உணவு உகாதி பச்சடி. இதில் மாங்காய், வெல்லம், மிளகாய், புளி, வேப்பம்பூ, உப்பு, என அறுசுவையும் கலந்து செய்யப்படுகிறது. வாழ்க்கையானது இன்பம், துன்பம் நிறைந்தது என்பதை உணர்த்துகிறது என்றார். மராத்தியர்களின் கொண்டாட்டம் மகாராஷ்டிரத்தில் வாழும் மராத்தியர்களால் இன்றைக்கு புத்தாண்டு பிறப்பு வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது என்றார்.

 விழாவில் வ.முத்து, கோ.ஏகாம்பரம், முனைவர் வி.சுப்புராஜ், மீ.ராமசுப்பிரமணியன், சு.பாலகிருஷ்ணன், ரெ.கார்த்திகேயன், வீ.காளீஸ்வரன், எஸ்.சொக்கலிங்கம், ஏ.சி.பாபுலால், பி.பன்னீர்செல்வம், டி.ஜேக்கப், கே.அண்ணாமலை, ஆர்.ரெங்கசாமி, யோகம் மாரிமுத்து, மு.முருகேசன், சிவானந்த சீனிவாசன், நவாப்ஜான், அழ.சிதம்பரம், ஆர்.பாண்டியராஜன், ஜெ.ரவிசங்கர் கலந்து கொண்டனர். தியாகதீபம் அ.பாலு நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்