முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு

புதன்கிழமை, 29 மார்ச் 2017      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை  - விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சிறப்பு பூஜைகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மலையாள மாதம், தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், கோவில் திருவிழா, விஷூ பண்டிகை, பங்குனி உத்திரம் மற்றும் ஆராட்டு உள்பட சிறப்பு தினங்களில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் கோவில் திருவிழா வருகிற 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 9-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

புதிய கொடிமரம்
ஆனால் தற்போது புதிய கொடி மரம் அமைக்கும் பணி நடைபெறுவதை முன்னிட்டு, இந்த ஆண்டு கோவில் திருவிழா திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. புதிய கொடிமரம் அமைக்கப்பட்டதும் கோவில் திருவிழா நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்தது. ஆனால், திருவிழா நடைபெறாது என்றாலும், கோவில் நடை வழக்கம்போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இன்று நடை திறப்பு
அதன்படி இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்பதால் பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

20 தினங்கள் ....
நாளை காலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். ஆனால் திருவிழா நாட்களில் நடத்தப்படும் உத்சவ பலி நடைபெறாது. இந்த ஆண்டு விஷூ மற்றும் சித்திரை மாத பூஜைகள் சேர்ந்தே வருவதால் ஏப்ரல் 18-ந் தேதி வரை 20 தினங்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். விஷூ பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 14-ந் தேதி விஷூக்கனி தரிசனம் மற்றும் கை நீட்டம் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்