போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி கலெக்டர் டி.பி.ராஜேஷ் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      கடலூர்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கடலூர் மாவட்டத்தில் வருகிற 02.04.2017 அன்று முதல் தவணை மற்றும் 30.04.2017 அன்று இரண்டாவது தவணை போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. இம்முகாம் நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியினை கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் 2004க்கு பிறகு போலியோ நோய் பாதிப்பு இல்லை. இந்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியில், போலியோ நோய் பாதிப்பு ஏற்பட்டால் உண்டாகும் விளைவுகள் பற்றிய புகைப்படமும், போலியோ நோய் வராமல் பாதுகாத்திட போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விளம்பரமும் உள்ளன. இதுதவிர விழிப்புணர்வு வாசகங்களை ஒலிக்க மைக் மற்றும் ஒலிபெருக்கி வசதியும் இவ்வாகனத்தில் உள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கே.ஆர்.ஜவஹர்லால், மருத்துவ அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: