முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலைமலை முருகன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தங்க ஊஞ்சல் முருக பக்தர்கள் காணிக்கை

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

  அழகர்கோவில் -மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் உள்ளது பிரசித்தி பெற்ற ஆறாவது வீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இக்கோவிலுக்கு ஏற்கனவே முருக பெருமானுக்கு வைரவேல், தங்ககிரிடம், தங்க அங்கிகள் மற்றும் தங்க கொடிமரம், தங்க தேர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காணிக்கையாக வரப்பெற்று அதை நிர்மானிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதில் முக்கியமாக திருவிழா காலங்களில் மட்டும் மூலவர்சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் பள்ளியறையில் உள்ள ஊஞ்சல் தங்க ஊஞ்சலாக மாற்ற முருக பக்தர்கள் முன்வந்தனர். இதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. 

அதன்படி சுமார் 1கிலோ எடையில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தங்க ஊஞ்சல் நாகபட்டின மாவட்டம் மயிலாடுதுறையில் அதற்கான தொழிலார்களை வைத்து பிரத்தியேகமாக கலை நுணுக்கங்களுடன் கூடிய தங்க இழைகள் தயாரிக்கப்பட்டது. இந்த ஊஞ்சல் ரெங்கோன் தேக்கு மரக்கட்டைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர அதற்கான தாமிரங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை மயில், வேல் மற்றும் தேவதைகளுடன் கூடிய அடையாளத்துடன் தங்க ஊஞ்சல் சோலைமலை முருகன் கோவிலில் உள்ள பள்ளியறையில் நிர்மாணிக்கப்பட்டது.

பின்னர் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சஷ்டி மண்டபத்திலிருந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பள்ளியறையில் உள்ள புதிய தங்க ஊஞ்சலில் எழுந்தருளப்பட்டது. அங்கு விசேஷ பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவின்போது தக்கார் வெங்கடாசலம், இணை ஆணையர் பச்சையப்பன், நிர்வாக அதிகாரிகள் மாரிமுத்து, செல்லத்துரை மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், முருக பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதே சோலைமலை முருகன் கோவிலில் 30கிலோ எடை கொண்ட வெள்ளியிலான ஊஞ்சல் பள்ளியறை அருகிலேயே தனியாக நிறுவப்பட்டுள்ளது. இதில் குழந்தை வரம் பெற்ற பக்தர்கள் வெள்ளி ஊஞ்சலில் குழந்தையை அமர வைத்து அதற்கான காணிக்கை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் தங்க ஊஞ்சலும், வெள்ளி ஊஞ்சலும் காணப்படுவது தனி சிறப்பாக உள்ளது. மேலும் இக்கோவிலில் நடைபெறும் நிகழ்வுகளை இரவு பகலாக கண்காணிக்க 5 எம்.பி கொண்ட நவின கேமரா அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர போலிசார்களும், சாதாரண உடையில் இக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்