முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா கலெக்டர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பழைய குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புதிதாக மின்னணு குடும்ப வழங்கும் விழா நேற்று தொடங்கியது. ஊட்டியில் மலைப்பகுதிப் பகுதி மேம்பாட்டுத் திட்ட பயிற்சி அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார். குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ஏ.ராமு, ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது-

எந்த ஒரு அரசு மக்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும் கொடுக்கிறதோ அது நல்ல அரசு. அது நம்ம அரசு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பசி, பட்டினியை போக்குவதற்காக 24 கிலோ அரிசி வழங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 404 நியாயவிலைக்கடைகள் உள்ளன. இதன் மூலம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 823 குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு 4435 மெட்ரிக் டன் அரிசி ரூ.13.3 கோடி அளவிற்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 160 கோடி ரூபாய்க்கு நமது மாவட்டத்திற்கு விலையில்லா அரசி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பட்டினிச்சாவு இல்லாமல் இருக்கும் வகையில் ஏற்படுத்திக்கொடுத்த முன்னாள் முதலமைச்சருக்குத்தான் நாம் நன்றி தெரிவிக்கும் நேரமிது.

மேலும் கோவில்களில் அன்னதானம், ஏழை மக்களின் நன்மைக்காக ஒரு ரூபாய்க்கு அம்மா உணவகங்கள் மூலம் இட்லி கிடைக்கச்செய்தவர் நமது முன்னாள் முதலமைச்சர். இந்த அம்மா உணவகங்களில் ஆட்டோ ஓட்டுநர், ஏழை_எளிய மக்கள் மட்டுமல்லாது, ஐ.டி.துறையைச் சேர்ந்தவர்களும் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவை ருசித்து உண்கின்றனர். இது எப்படி சாத்தியமாகிறது என்று மற்ற மாநில மக்களும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அம்மா உணவகம் திறப்பதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது. நல்ல மனமும் இருக்க வேண்டும். அந்த மனதிற்குச் சொந்தக்காரர் நமது முன்னாள் முதல்வர். நியாயவிலைக்கடைகளில் தவறு நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இந்த ஸ்மார்ட் கார்டில் உள்ள பிழைகள், பெயர் சேர்த்தல், நீக்குதல், கடை மாற்றம் போன்றவற்றை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம். இனிமேல் தாசில்தார் அலுவலகங்களுக்குச் செல்ல தேவையில்லை. எனவே இந்த ஸ்மார்டை அட்டையை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் என்சிஎஸ் தலைவர் கண்ணபிரான், நீலகிரி கூட்டுறவு நிறுவன தலைவர் கே.சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெள்ளி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, துணைப்பதிவாளர் நீலா, வட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரத்தினம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்