நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      நாமக்கல்

நாமக்கல் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நேற்று (01.04.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,

 

தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளதன் அடிப்படையில், இன்று (01.04.2017) முதல் நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட நாமக்கல் வட்டத்தில் தற்போது வரப்பெற்றுள்ள 22,078 மின்னணு குடும்ப அட்டைகள் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் வழங்கும் விதமாக இவ்விழாவில் 46 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய மின்னணு குடும்ப அட்டைகளின் விநியோகம் குறித்த விபரம் மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் எண்ணிற்கு ஒருமுறை கடவுச் சொல் குறுஞ்செய்தியாக வரும். அந்த குறுஞ்செய்தி வரப்பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் தற்போதைய குடும்ப அட்டை மற்றும் குறுஞ் செய்தியுடன் சம்மந்தப்பட்ட பொதுவிநியோக கடைக்கு சென்று குறுஞ்செய்தியில் உள்ள கடவுச் சொல்லை விற்பனையாளரிடம் தெரிவிக்கவேண்டும். மேற்படி கடவுச்சொல் ஏழு தினங்களுக்கு செல்லுபடியாகும். பொது விநியோக கடையில் உள்ள விற்பனையாளர் குடும்ப அட்டைதாரர் கொண்டு வரும் கடவுச் சொல்லை பொது விநியோக அங்காடியில் உள்ள விற்பனை முனையக் கருவியில் பதிவு செய்வர். அதன் பின்பு குடும்ப அட்டைதாரரது புதிய மின்னணு குடும்ப அட்டை செயல்பாட்டிற்கு வரும். எனவே, குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக்கடையில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள் சரியாக உள்ளதா? என்பதனை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். மேலும், நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைகளுடன் செல்போன் எண்கள் மற்றும் ஆதார் எண்களை இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடன் பதிவு செய்துக் கொள்ளவேண்டும். உணவுப்பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சேவைகளை இணையத்தொடர்பு இல்லாத செல்போன்களில் புதிய மின்னணு குடும்ப அட்டைதாரர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இணையத்தொடர்பு இல்லாத செல்போன்களிலும் பொதுமக்கள் இச்சேவையினைப் பெற்று பயன்பெறலாம். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சேவைகள் எளிதாக மக்களுக்கு கிடைத்திடவும், பொதுமக்களின் சிரமங்களை குறைத்திட ஏதுவாகவும் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார்.நாமக்கல் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவோர் அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் அன்னபூர்ணா திட்ட குடும்ப அட்டைகள் தவிர நாமக்கல் வட்டத்தில் 90,886 குடும்ப அட்டைகளும், இராசிபுரம் வட்டத்தில் 92,454 குடும்ப அட்டைகளும், திருச்செங்கோடு வட்டத்தில் 91,035 குடும்ப அட்டைகளும், பரமத்தி வேலூர் வட்டத்தில் 62,109 குடும்ப அட்டைகளும், கொல்லிமலை வட்டத்தில் 12,517 குடும்ப அட்டைகளும், சேந்தமங்கலம் வட்டத்தில் 56,628 குடும்ப அட்டைகளும் மற்றும் குமாரபாளையம் வட்டத்தில் 79,217 குடும்ப அட்டைகளும் என மொத்தம் 7 வட்டங்களில் 4,84,846 குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட 22,078 குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பெற்றுள்ளன. இவற்றில் 46 குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கி துவக்கி வைத்தார்.இவ்விழாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.அசோகன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளர் கே.ஜெகநாதன் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் இரா.மணி வாழ்த்துரை வழங்கினார். குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நாமக்கல் தனிவட்டாட்சியர் வை.இளங்கோ நன்றியுரையாற்றினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: