முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற 278 -வது ஜல்லிக்கட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.-திருமங்கலம் தாலுகா கரடிக்கல் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற  278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவில் 600க்கும்   மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்ததில் 45வீரர்கள் காயமடைந்தனர்.இருப்பினும் 12ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு விழாவினை பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுவந்து கண்டுகளித்தனர்.

மதுரை மாவட்டம்,திருமங்கலம் தாலுகாவில் உள்ள கரடிக்கல் கிராமத்திலுள்ள ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று 278-வது ஆண்டு உலகப்புகழ் பெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.இதற்காக  கரடிக்கல் கிராமத்தில் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கரடிக்கல் நான்கு பங்காளிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் கோலாகலமாக செய்திருந்தனர்.ஜல்லிக்கட்;டு நடத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகள்  அனைத்து ஏற்பாடுகளும் விழா கமிட்டியினரால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கரடிக்கல் கிராமம் அருள்மிகு ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை நடைபெற்ற 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவினை உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா தொடங்கி வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் மற்றும்  மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழியேற்பு நிகழச்சியையும் முன்னின்று நடத்தினார்.

இதை தொடர்ந்து கரடிக்கல் கோவில் திடலில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான காலரிகளில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களின் பலத்த கரவொலிக்கு மத்தியில் கரடிக்கல் கோவில் காளை முதன் முதலில் அவிழ்த்து விடப்பட்டது.இதையடுத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாடிவாசலிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினார்கள்.இருப்பினும் மர்டுபிடி வீரர்களை தூக்கிவீசிய காளைகள் பார்வையாளர்களின் கரகோஷத்தையும்,விழா கமிட்டியினரின் பரிசுபொருட்களையும் வாரிச் சென்றன.இந்த போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம்,பிரிட்ஜ், மோட்டார் சைக்கிள்,கட்டில்கள்,சைக்கிள்கள்,டிராவல் பைகள்,அண்டா,பானை,மிக்சி, கிரைண்டர், காளங்கன்றுகள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் விழா கமிட்டியினரால் வழங்கப்பட்டன.காளைகள் சீறிப்பாய்ந்து விளையாடியதில் 45க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.அவர்கள் 108ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலம் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட மாடுபிடி வீரர்கள் உடனடியான மைதானத்தை விட்டு போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.அதே சமயம் வாடிவாசல் வரும்வரை நீண்டவரிசையில் காத்துநின்ற காளைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.அதே போல் மாடு பிடி வீரர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விழா கமிட்டியினரால் செய்யப்பட்டிருந்தன.மேலும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடாமல் தடுத்திட 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகளுக்கும்,மாடுகளை மடக்கிப்பிடித்த வீரர்களுக்கும் விழா கமிட்டியார்களான ஆண்டிச்சாமி,மொக்கராஜ்,ஆண்டிச்சாமி,மணிமுத்து மற்றும் கிராமத்தினர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.மேலும் போட்டியில் பல காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.மொத்தத்தில் 12ஆண்டுகளுக்கு பின்பு நடத்தப்பட்ட இந்த பழமைமிகு ஜல்லிக்கட்டு போட்டியினை பல்லாயிரணக்கானோர் திரண்டு வந்து கண்டு களித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஜல்லிக்கட்டு விழா சிறப்பான முறையில் நடந்து முடிந்ததால் கரடிக்கல் கிராமத்தில் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்