அகிலேஷ் என்னை அவமானப்படுத்தினார்: மகன் மீது முலாயம்சிங் யாதவ் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      அரசியல்
mulayam singh yadav(N)

லக்னோ  - அகிலேஷை போல வேறு யாரும் என்னை அவமானப்படுத்தியது இல்லை’ என்று அவரது தந்தை முலாயம் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.  உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவும் அவரது சித்தப்பா சிவபால் யாதவும் நேரடியாக மோதினர். இதில் சிவபால் யாதவுக்கு கட்சியின் நிறுவனரும் அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் ஆதரவு அளித்தார்.  இருதரப்பினரும் கட்சியின் சைக்கிள் சின்னத்தை கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இறுதியில் அகிலேஷ் யாதவ் அணி சைக்கிள் சின்னத்தை கைப்பற்றியது. கட்சியின் தேசியத் தலைவர் பொறுப்பில் இருந்து முலாயம் நீக்கப்பட்டார். அந்தப் பதவியை அகிலேஷ் ஏற்றுக் கொண்டார். எனினும் தேர்தலின்போது இருதரப்பினரும் சமரசம் செய்துகொண்டு ஒரே அணியாகப் போட்டியிட்டனர். ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தோல்வியைத் தழுவியது. பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்தப் பின்னணியில் முலாயம் சிங், மெயின்புரியில்   கூறியதாவது:  கடந்த 2012 சட்டப்பேரவைத் தேர்தலின்போது எனக்காகவே மக்கள் வாக்களித்தனர். ஆனால் நான் எனது மகன் அகிலேஷை முதல்வராக்கினேன். அதன்பிறகு அவர் என்னை பல்வேறு வகைகளில் அவமானப்படுத்த தொடங்கிவிட்டார். அவரைப் போல வேறு யாரும் என்னை இழிவுபடுத்தியது கிடையாது. காங்கிரஸ் கட்சி எனக்கு எதிராக 3 முறை சதிச் செயல்களில் ஈடுபட்டது. எனது விருப்பத்துக்கு மாறாக அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். பெற்ற தந்தையிடமே விசுவாசமாக இல்லாத கிலேஷ், மாநில மக்களிடம் எவ்வாறு விசுவாசமாக, உண்மையாக இருப்பார்? பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அந்த உண்மையை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: