ஆர்.கே.நகர் தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது: மதுசூதனன்

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      அரசியல்
OPS - Campaign 2017 04 03

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது என்று வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனன் நேற்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்.

இ.மதுசூதனன் தொகுதி முழுவதும் சூறவாளி பிரசாரம் செய்து இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கொளுத்தும் வெயிலிலும் வீடு வீடாக சென்று அம்மா ஆட்சியின் சாதனைகளை பெண்களிடம் விளக்கி கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் இ.மதுசூதனன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- தேர்தலில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- மக்களின் எண்ணங்களை உணர்வுகளை தொகுதி முழுவதும் சுற்றி அலசி ஆராய்கின்றவர்கள் நீங்கள். நீங்கள் தான் அந்த உண்மையை மறைக்காமல் நாட்டுக்கு சொல்ல வேண்டும். முழு பூசணிக்காயை யாராலும் சோற்றில் மறைக்க முடியாது எனது வெற்றி வாய்ப்பானது அண்ணன் ஓ.பி.எஸ். தலைமையின் மூலமாக பிரகாசமாக உள்ளது. அம்மா அவரது அமைச்சரவையில் இடம் கொடுத்தார். 2015-ம் ஆண்டு அம்மா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது என்னைத்தான் மாற்று வேட்பாளராக நிறுத்தினார். அதன்பின் 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அம்மா ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோதும் என்னைத்தான் மாற்று வேட்பாளராக அறிவித்தார். அது மட்டுமின்றி என்னுடைய வெற்றிப் படிவத்தை அதிகாரியிடம் நீ தான் பெற்று என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையிட்ட தலைவிதான் புரட்சித்தலைவி அம்மா.போயஸ் தோட்ட இல்லத்தில் நான் வெற்றி படிவத்தை அவரிடம் கொடுத்த போது, மகிழ்ச்சியின்றி பெற்றுக்கொண்டார். எல்லோரையும் விலகி நிற்க சொல்லி விட்டு உணர்ச்சி பெருக்குடன், அதனை வெளிக் காட்டாமல் மது, நான் உன்னிடம் நிறைய பேச வேண்டியுள்ளது ஒட்டு மொத்த சென்னை மாவட்டத்தில் நம் கட்சியை சீர் குலைத்து விட்டார்கள். அதை சரி செய்ய வேண்டும் என்றார். இதனை மோப்பம் பிடித்த சசிகலா கூட்டம் கடைசி வரை அப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது என்று கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை அம்மா நின்ற போது மாற்று வேட்பாளர் நான்தான். புரட்சித்தலைவி அம்மாவின் பரிபூரண நல்லாசி என்னைத் தவிர யாருக்கும் கிடைக்கவில்லை.

கே:- டி.டி.வி. தினகரனைப் பற்றி தங்களின் கருத்து?
ப:- முதன் முதலில் அம்மாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியவர் தான் இந்த தினகரன். அம்மாவால் போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டவர் தான் இந்த டி.டி.வி தினகரன். அம்மா இருக்கும் வரை போயஸ் தோட்டம் பக்கமே எட்டி பார்க்காத இந்த தினகரனைத்தான் சசிகலா காலையிலே கழக உறுப்பினராக்கிறார். மாலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் ஆக்குகிறார். இன்றைக்கு இடைத்தேர்தலிலே வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுகள் போட்டு சட்ட மன்ற உறுப்பினராகலாம் அதன் மூலம் தமிழக முதலமைச்சராக திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

கே:- தாங்கள் வெற்றிப் பெற்று வந்தவுடன் தொகுதி மக்களுக்கு ஆற்றக்கூடிய முதல் பணி என்னவாக இருக்கும்?
ப:- அம்மா ஆற்றியிருக்கின்ற திட்டங்களே எங்களின் வெற்றிக்கு முதல் காரணமாகும். நாளை . ஓ.பி.எஸ். தலைமையில் ஒன்றுப்பட்ட அ.தி.மு.க ஆட்சி நிச்சயம் அம்மா அவர்களின் நல்லாசியுடன் அமையும்.இப்போது மேலோங்கியுள்ள முதல் பிரச்சினை குடிநீர் பஞ்சம் அதனை அறவே போக்க பாடுபடுவேன். சுத்தமான குடிநீர் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற் கொள்வேன். தங்குவதற்கு வீடின்றி, தவிப் போர்க்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புக்களைப் பெற்று தந்து குடிய மர்த்துவேன். பல ஆண்டு காலம் பட்டா கிடைக்க பெறாதவர்களுக்கு பட்டா பெற்று தருவேன்.1991 முதல் 1996 வரை நான் இந்த தொகுதிக்கு செய்திருக்கின்ற திட்டங்களை இந்த காலக் கட்டத்தில் செய்ய வேண்டும் என்று சொன்னால், பல ஆயிரம் கோடிகள் ஆகும். இதனை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். 21 ஆண்டு காலத்திற்கு பின்பும் என்மீது நன்றியுணர்வு கொண்டு நான் ஆற்றிய பணிகள் குறித்து சொல்லி, வாக்காள பெருமக்கள் என்னை திக்குமுக்காட வைக்கிறார்கள். அம்மா சொன்னதை போல் மக்களால் நான், மக்களுக் காகவே நான் என்று களப் பணியாற்றுவேன் என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: