முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழக்கரையில் செய்யதுஹமீதா கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-கீழக்கரையில் முகம்மது சதக் அறக்கட்டளையினரால் நடத்தப்படும் செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

     ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் அறக்கட்டளையினரால் நடத்தப்பட்டு வரும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர் அல்ஹாஜ்.முகம்மது ஜஹாபர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ரஜபுதீன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக பல்லுயிர் மற்றம் வனவியல் துறை தலைவருமான டாக்டர் முத்துச்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 308 மாணவ-மாணவிகளுக்கு இளங்கலை பட்டங்களையும், 47 மாணவ-மாணவிகளுக்கு முதுகலை பட்டங்களையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- மனிதன் அறிவாற்றலின் மூலம் மட்டுமே அறிவியல் தொழில்நுட்பம், ஆற்றல் உற்பத்தியில் முன்னிலை பெற முடியும். அந்த வகையில் அறிவாற்றல் ஒன்றே அனைத்து ஆற்றல்களுக்கும் திறவுகோல் ஆகும். அறிவியல் வளர்ச்சி, ஆற்றல் திறன்மேம்பாடு, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப பயன்பாடுகள், அனைத்தும் அறிவாற்றலை சார்ந்தே அமைகின்றது.

      சமூக நல மேம்பாடு, கலாச்சார முன்னேற்றம், சமூகநெறி, நாட்டின்நெறி, பண்பாடு, பாரம்பரியம் போன்றவை அறிவாற்றலின் மூலமே ஏற்படும். அறிவாற்றல் நிறைந்த மனிதவளம் மிக்க நாடுகளே உலகில் முன்னனியில் உள்ளன. ஆகவே, இன்று பட்டம் பெறும் மாணவ-மாணவிகள் தங்களின் கல்வி அறிவையும், அறிவாற்றலையும் பயன்படுத்தி தங்களின் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். நாட்டின் பெருமை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தவறாமல் காத்து நமக்கும், நாட்டிற்கும் பெருமை தேடித்தரவேண்டும். போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் நமது நாட்டில் கல்வி பயின்ற மாணவ-மாணவிகள் தான் இன்று வெளிநாடுகளில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி தங்களுக்கு நிகர் யாரும் இல்லை என்று வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். படித்த மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களின் கல்வி அறிவையும், அறிவாற்றலையும் தீய செயல்களுக்கு பயன்படுத்தாமல் ஒழுக்கத்துடன் செயல்பட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கு பயன்படுத்தி தாங்கள் மட்டுமல்லாது இந்த இந்திய சமுதாயத்தையும் மேம்படுத்த உறுதி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

     நிகழ்ச்சியில், கீழக்கரை சதக்பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்பாஸ் முகைதீன், முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் டாக்டர் அலாவுதீன், டாக்டர் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சோமசுந்தரம், செய்யது ஹமீதா அரபிக்கல்லூரி முதல்வர் ஹபீப் முகம்மது, ராமநாதபுரம் சைடெக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரியாஸ் அகமது, கீழக்கரை ஹமீதியா அண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர்பாரூக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில், மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவிற்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.யூசுப் சாகிப், செயலாளர் சர்மிளா, இயக்குனர் ஹாமீது இப்ராகிம் ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்