முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் மாநில அளவில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பயிலரங்கம் : மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாநில அளவில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பயிலரங்கத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் , போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , அரசு முதன்மைச் செயலாளர் போக்குவரத்து ஆணையர் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் தயானந்கட்டாரியா, மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, ஆகியோர் நேற்று(04.04.2017) தொடங்கி வைத்தனர்.

 

பேரணி

 

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையும் இணைந்து சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என 1200 பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி இரயில்வே நிலையத்தை சென்றடைந்தது.

பேரணியில் பங்கேற்றவர்கள், பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘’தலைக்கவசம்! உயிர் கவசம்!, மித வேகம்! மிக நன்று! படியில் பயணம் நொடியில் மரணம்!! போன்ற பல்வேறு விளம்பர பதாகைகளை ஏந்திச் சென்றனர். தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி 300 பேர் இருச்சக்;கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநில அளவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தொடர்ச்சியாக விபத்தில்லாமல் பேருந்து இயக்கியதில் முதல் இடம்பெற்ற ஓட்டுனர்கள் மற்றும் டீசல் சிக்கனத்தில் முதல் இடம் பெற்ற ஓட்டுநர்கள் 16 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினார்கள்

 

 

அமைச்சர் பேச்சு

 

அதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கத்தை தொடங்கி வைத்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பேசியதாவது:

இந்தியாவில் சுமார் 50 இலட்சம் கிலோ மீட்டர் நீள சாலை உள்ளது. இதில் ஆண்டு தோறும் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்திலும் அதிக அளவு விபத்துகள் நடைபெறுகின்றன். இந்திய அளவில் தமிழகம் தான் சாலை விபத்தில் முதலிடம் வகிக்கிறது. ஆண்டு தோறும் இந்திய அளவில் ஏற்படும் விபத்தில், சுமார் 5 லட்சம் பேர் காயமடைகின்றனர். இதில் தமிழகத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைகின்றனர்.

இந்தியாவில் கடந்தாண்டு நிகழ்ந்த விபத்தில் 1 இலட்சத்து 46 ஆயிரத்து 133 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 15 ஆயிரத்து 642 வாகன ஓட்டிகள் இறந்துள்ளனர். விபத்தால் ஏற்படும் மரணத்தில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது என்பது வேதனைக்குரிய தகவலாகும். சுமார் 72 சதவீத விபத்துகள் வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக ஏற்படுகிறது. விபத்தில் சிக்கி மரணமடைபவர்களில் 100க்கு 52 சதவீதம் பேர் இளைஞர்கள் தான்.

திருச்சி மாவட்டத்தில் 2016-2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த 562 விபத்துகளில் 583 பேர் மரணமடைந்துள்ளனர். எனவே வரும் காலங்களில் விபத்துக்களை குறைக்க நாம் உறுதி ஏற்போம். இவ்வாறு பேசினார்.

 

பாதுகாப்பு உறுதி

 

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் பேசியதாவது:

இன்றைய கால கட்டத்தில் சாலை பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சாலை பாதுகாப்பு உறுதி செய்யப்பட, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பிற்க்காக 2011 ஆம் ஆண்டு 15 கோடியாக வழங்கப்பட்ட நிதியினை அம்மா ரூபாய் 40 கோடியாகவும் பின்பு ரூபாய் 65 கோடியாகவும் உயர்த்தினார்கள். சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் மோட்டார் வாகன விதிகளின்கீழ்; 6 மாத காலத்திற்கு தற்காலிக தகுதி இழப்பும், மீண்டும் அத்தவறை செய்யும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக இரத்து ;செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் இரத்து செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அம்மா முதலமைச்சர் விபத்து நிவாரண நிதியினை கடந்த காலங்களில் ரூபாய் 10 கோடியாக இருந்த நிதியினை ரூபாய் 60 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளார்கள். இந்நிதியிலிருந்து சாலை விபத்துகளில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூபாய் 1 இலட்சம் வழங்கப்படுகிறது. நிரந்தர ஊனம் மற்றும் கொடுங்காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒரு கண் அல்லது கால் இழந்தவர்களுக்கு ரூபாய் 30 ஆயிரமும் சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்பொழுது எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் விபத்துகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கிராமப்புற நெடுஞ்சாலைகளில்தான் விபத்து அதிகம் நடைபெறுகிறது. மாணவ, மாணவியர்களுக்கு சாலை விதிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் சாலை விதிமுறைகள் குறித்து பயிற்றுவிக்கப்படும். இவ்வாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் தேசிய சுகாதார நிறுவன இயக்குநர் டாக்டர்.தரேஸ் அகமது, சென்னை பெருநகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு ஏடிஜிபி ஜெயந்த்முரளி,இ.கா.ப, மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.வரதராஜன், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ.அருண்,இ.கா.ப., திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) மயில்வாகனன், மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) பிரபாகரன்,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்கள் டாமாலி கங்குலி, அருணாச்சலம், எம்.முருகேசன், சாந்தி, ஆர்.கிருஷ்ணாசாமி, பி.நிர்மலா, சுப்பையா, எஸ்.சந்திரசேகரன், பேராசிரியர்கள் மோசஸ், சாம்சன், குணசேகரன், சிறப்பு விருந்தினர்கள் டாக்டர்.கவிதாசன், பி.எஸ்.ஆனந்தராவ் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர்கள், நிர்வாக மேலாளர்கள், இயங்கூர்தி ஆய்வாளர்கள,; பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்