முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொன்னேரியில் விவசாயிகள் பேரணி

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      திருவள்ளூர்

பொன்னேரியில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர். பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வந்த விவசாயிகள், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடினர். அப்போது, மத்திய அரசு தங்களை வஞ்சித்து விட்டதாக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தேசிய வங்கிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். 25 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இவர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், கடந்த வர்தா புயலினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் காப்பீட்டு தொகையை வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரிகளை மீட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், நிலத்தடி நீரை பாதிக்கும் இறால் பண்ணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட இவர்கள் தேரடி, புதிய பேருந்து நிலையம், தாலுக்கா ஆபிஸ் சாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்து சார் ஆட்சியரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்