முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா மீது ஏவுகணை தாக்குதல்: ஐ.நா. சபையில் அமெரிக்கா - ரஷ்யா கடும் மோதல்

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் அமெரிக்கா - ரஷ்யா இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

ரசாயன தாக்குதல்
சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல முக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

அமெரிக்கா தாக்குதல்
இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது நேற்று முன்தினம் அமெரிக்கா பயங்கரமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு சிரியா அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டிவரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவசரக் கூட்டம்
இந்நிலையில், சிரியா நாட்டிலுள்ள விமானப் படை தளத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக விவாதிப்பதற்காக 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்துக்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது.

ரஷ்யா குற்றச்சாட்டு
இந்த கூட்டத்தில் அமெரிக்காவின் போக்கை ஆதரிக்கும் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐ.நா.சபையின் தூதர்களும், அமெரிக்காவை கடுமையாக எதிர்த்துவரும் ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமெரிக்காவின் மீது ரஷ்யா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பேசிய ஐ.நா.சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலே, சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி செய்துவரும் அட்டூழியத்துக்கு இனியும் நியாயம் கற்பிக்க முயற்சிக்க கூடாது என்று குறிப்பிட்டார்.

வேண்டுகோள்
இந்த விவாதத்தின்போது இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் வகையில் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டெரெஸ் பேசினார்.  அப்போது,  உச்சகட்டத்தை அடைந்துவரும் நிலைமைகளை கூர்ந்து கவனிக்கும் வேளையில், சிரியாவில் வாழும் மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்