முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் பழங்குடியின மக்களுக்காக மாபெரும் மருத்துவ முகாம் கலெக்டர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் பழங்குடியின மக்களுக்காக நடத்தப்பட்ட மருத்துவமுகாமை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார்.

                                  பழங்குடியினர் பண்பாட்டு மையம்

ஊட்டியில் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பழங்குடியினருக்கான மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்து பேசியாதவது-

நீலகிரி மாவட்டத்தின் மூத்த குடிமக்கள் நம்முடைய பழங்குடியின மக்கள். நீலகிரி மாவட்டத்தின் அடையாளம் நல்ல ஒழுக்கமும், பண்பாடும் நிறைந்த குடிமக்கள். எனவே தான் பெருமை மிக்க இந்த சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டி அரசு செயல்படுத்து வருகிறது. பண்டைய பழங்குடியினர் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.18.24 கோடியும், மாநில திட்டக்குழு சார்பில் ரூ.2 கோடியும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.24.61 கோடியும், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் ரூ.11.7 கோடியும், மலைப்பகுதி மேம்பாட்டு பண்பாட்டு மையம் சார்பில் ரூ.15 கோடியும், தமிழக ஊரக வாழ்வாதார திட்டம் சார்பாக ரூ.4.14 கோடியும், வங்கி இணைப்பு கடன் ரூ.9.16 கோடியும், தாட்கோ மூலமாக வாகனம் மற்றும் தொழில் தொடங்க ரூ.3.56 கோடியும் என மொத்தம் ரூ.88.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

                           தவறாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்

அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு சாதி சான்றிதழ்களும், 100 குடும்ப அட்டைகள், குடும்ப ஓய்வூதியம், கறவை மாடுகள் மற்றும் வீடுகளும் கட்டித் தரப்பட்டுள்ளன. இங்கு வந்துள்ள பெற்றோர்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். வனப்பகுதிகளில் இருந்து பள்ளிக்கு சென்று வரும் 743 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போக்குவரத்து படிவமும், 299 மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பு படிவத்திற்கு வருடத்திற்கு ரூ.3 லட்சம் செலவிடப்படுகிறது. அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

                                  1500 பழங்குடியின மக்கள்

கடந்தாண்டு ஆதிவாசி மக்களுக்காக கூடலூர் பகுதியில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2500 பழங்குடியின மக்கள் பயன்பெற்றனர். இன்று நடைபெறும் முகாமில் 1500 பழங்குடியின மக்கள் வரை பயனடைவார்கள். இம்முகாமில் பல்வேறு மருத்துவமனையைசார்ந்த கண், காது மூக்கு, தொண்டை, இருதயம், ஆர்தோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்களும், செவிலியர்களும் வந்துள்ளனர் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் உள்ளது. எனவே பழங்குடியின மக்கள் இந்த மருத்துவ முகாமினை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இம்முகாமில் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் தீபக் ஸ்ரீ வத்சவா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ், ரெட்கிராஸ் தலைவர் கேப்டன் கே.ஆர்.மணி மற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்