முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களத்திர தோஷம் போக்கும் ஸ்ரீரங்கம் பங்குனி உத்திர சேர்த்தி வைபவம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      ஆன்மிகம்
Image Unavailable

உலகிற்கெல்லாம் முதல் தாய் தந்தையராகவும், கணவன் மனைவியாகவும் விளங்கும் சூரிய சந்திரர்கள் இணைவு பெறும் விசேஷமான தினம் பங்குனி உத்திரம். இந்த நாளில் நடைபெறும் புகழ்பெற்ற நிகழ்ச்சியான "சேர்த்தி வைபவம்' மிகவும் உன்னதமான வைபவம் ஆகும்.

களத்திர தோஷம் இருந்தால்....

ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால் அவர்கள் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கும். இந்த நாளில் சூரியன் மீனத்தில் குருவீட்டிலும் சந்திரன் கன்னியில் உத்திர நட்சத்திரத்தில் புதன் வீட்டிலும் நின்று சம சப்தம சேர்க்கை பெறும் நாள் இது. தெய்வங்களின் பிறந்த நாள், திருமணநாள் என பங்குனி உத்திரம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்த நாளில்தான் சிவ விஷ்ணுவின் புதல்வராக தர்மசாஸ்தா அவதரித்தார். தென் மாவட்டங்களில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் காடுகளில் உள்ள சாஸ்தா கோவில்களுக்குச் செல்வர். சாஸ்தாவின் அவதார தினமான பங்குனி உத்திரநாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விசேஷ பூஜை உண்டு.

முருகன் தெய்வானையை மணந்த நாள்

இந்நாளில் தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவதரித்தாள். கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது. இந்த திருமணக் கோவலத்தைத் தான் சித்திரை விசுவன்று பொதிகையில் அகத்தியருக்கு தரிசனமாக்கினர். ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கனன் சுருதகீர்த் தியையும் கைப்பிடித்த நாளும் இது தான். முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே.தெய்வங்கள் இருதாரங்களை மணந்ததை புராண கதைகளில் படித்திருக்கிறோம். மனிதர்களுக்கும் பலருக்கு இருதார யோகம் அமைகிறது. ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்தே அவருக்கு இருதார அமைப்பு உண்டா என்பதை அறிந்து கொள்ளலாம்

யார் யாருக்கு இரு தார  யோகம்

கடகமும் சிம்மமும் லக்னமாகி ஏழுக்குடைய சனி இரண்டில் நின்றால் இருதார யோகம் அமைந்துவிடும்.ஏழாம் இடத்திலும் பதினொன்றாம் இடத்திலும் இரண்டு கிரகங்கள் இருந்தால் இருதார யோகம் ஏற்படும். ஏழுக்கு உடையவன் ராகுவுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் இருந்தால் அந்த சாதகனுக்கு இருதார யோகம் ஏற்படும். ஏழாம் வீட்டில் சுக்கிரன் சனி சேர்க்கை கண்டிப்பாக இருதாரயோகம் கொடுக்கும். ஏழாம் அதிபதி கெட்டு கெட்டவன் வீட்டில் இருந்தால் இருதார யோகம் ஏற்படும். ஏழாம் வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலும் ஏழுக்கு உடையவன் உச்சம் பெற்ற கிரகத்துடன் சேர்க்கை பெற்றாலும் அவனுக்கு இருதார யோகம் கொடுக்கும். பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் இருதார யோகம் ஏற்படும். ஏழுக்கு உடையவன் மூன்றில் மறைந்தால் இருதார யோகம் ஏற்படும்.

திருமணக்கோலம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருத்தலம் வைணவ 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு வைபவம் நடந்துக் கொண்டேயிருக்கும். ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி வைபவம் நடைபெறுவது குறித்து ஒரு வரலாறு உண்டு. இவ்வாலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் "ஆதி பிரம்மோற்சவம்' விபீஷணனால் தொடங்கப்பட்டது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு செல்கிறார் நம்பெருமாள். அப்போது புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி கொடுப்பார். பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொள்வார். பின்னர் இருவரும் திருமணக்கோலத்தில் சேவை சாதிப்பார்கள்.

ஸ்ரீரங்கநாதரான அழகிய மணவாளன்

ஒரு பங்குனி மாதத்தில் உறையூர் அருகே வேட்டையாடச் சென்றார். அப்போது அவர் கமலவல்லியைச் சந்தித்தார். ஸ்ரீ கமலவல்லியே சோழ மன்னனின் மகளாகப் பிறந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர்.அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலெட்சுமியின் அனுமதியின் பெயரில் தான்உறையூர்நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார்! புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்துவிடுகிறார்.
தொலைந்த மோதிரம்

ஆஹா நம் வீட்டுக்குப்போனால் அரங்கநாயகி 'எங்கே நான் அணிவித்த மோதிரம், புது மோதிரம் வந்த ஜோரில் பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா?' எனக்கேட்பாளே என்ன செய்வது ' என தவிக்கிறார் காவிரிக்குப்போய் (அப்போது நீர் நிறைய இருந்திருக்கும்) பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்களை எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறான்; தானும் தேடுகிறான்.ஒன்றும் கிடைக்கவில்லை!. இந்தக்காட்சிகள் இன்று அம்மா மண்டபம் காவிரியில் காணக்கிடைக்கும் ....சல்லடை போட்டு நிஜமாகவே சலிப்பார்கள் நீரை . இப்போது மணலை சலிக்கிறார்கள்.தப்பு பண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள விழைகிறான் .ஆகவே ஓசைப்படாமல் பல்லக்கில் இருந்தபடியே தாயார் சந்நிதி வாசலுக்கு வருகிறார். அன்னைக்கா தெரியாமல்போகும் அரங்கனின் தந்திரம்? டமால் என வாசற்கதவை சாத்திவிடுகிறாள்.ரங்கநாயகி தாயாரை சமாதானப்படுத்த ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் என்று எண்ணிய ஸ்ரீரங்கநாதர், "காவேரி ஆற்றைக் கடக்கும்போது, நீ அணிவித்த மோதிரம் தவறி விழுந்து விட்டது. அதைத் தேடிக் கண்டெடுக்க காலத்தாமதம் ஆகிவிட்டது' எனக் கூறினார். எனினும் தாயாருக்கு கோபம் தணியவில்லை.
ஸ்ரீ ரங்கத்தில் சேர்த்தி சேவை

சண்டை துவங்குகிறது! ப்ரணய கலகம் என்று பெயர். தாயார் சார்பாக சில ஊழியர்கள். தலத்தார் என்று பெயர். பெருமாள் சார்பாக சில ஊழியர்கள். தொண்டுக் குலத்தார் என்று பெயர்.தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள். ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல தளர்ந்து பின்னோக்கி நடக்கிறார்.சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார். உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்...படார்....உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது....இப்படியே மூன்று முறை! ஒரே கலாட்டா தான் !வடக்குச்சித்திரைவீதி மக்கள் எல்லாரும் அன்னைக்கு சப்போர்ட் செய்வார்கள் வெண்ணை பூக்களை பல்லக்கின் மீது வீசி எறியும் போது கைதட்டுவார்கள். தெற்குசித்திரைவீதி மக்கள் .கடைசியில் மட்டையடி நடக்கும்!மிகவும் மெல்லிய வாழை மட்டை...அதை வைத்து ஒரு சாத்து! மட்டையடி உற்சவம் என்பது இதுதான். பல்லக்கின்மீது வாழைமட்டைகள் தொடர்ந்து வீசப்படும். இந்த உற்சவத்தை "மட்டையடி உற்சவம்' என்றும் சொல்வார்கள். இந்த ஊடலை அறிந்த நம்வாழ்வார்,அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். பின்னர் ரங்கநாதர் உண்மையை ஒப்புக் கொண்டதால், நம்மாழ்வார் சொற்படி ரங்கநாயகி நாச்சியார், பெருமாளை ஏற்றுக் கொண்டார். இதையொட்டி கொண்டாடப்படும் வைபவத்தை "சேர்த்தி' என்று போற்றுவர்.

ஆதி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான பங்குனி உத்திரத்தன்று "நம்பெருமாள்' சித்திரை மாதம் உத்திர வீதிகளில் வலம் வந்து தாயார் சந்நியில் எழுந்தருள்வார். அப்போதுதான் மேற்கண்ட சேர்த்தி வைபவம் பங்குனி உத்திர மண்டபத்தில் நடைபெறும். பிறகு திருமஞ்சனம் முடிந்த பிறகு பெருமாளும் தாயாரும் தம்பதி சமேதராக சேவை சாதிப்பார்கள்.முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட ஸ்ரீ ரங்கநாதருக்கே இவ்வளவு அவஸ்தைகள் என்றால் மனைவிக்கு தெரிந்தும் தெரியாமலும் இருதாரம் கொண்டவர்களும் எடுப்பு தொடுப்பு என வைத்துக்கொண்டவர்களும் அடையும் துன்பம் எத்தனை என்பதே இந்த சேர்த்தி மூலம் உலகிற்க்கு உணர்த்தும் உண்மையாகும்.

சேர்த்தி சேவை தரிசனத்தின் நன்மைகள்:

ஜாதகத்தில் எந்தவிதத்தில் இருதார தோஷம் பெற்றிருந்தாலும் அவர்கள் இந்த சேர்த்தி சேவையில் ஸ்ரீ ரங்க நாயகி ஸமேத ரங்கநாதரை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும். அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ கிளிபோல ஒரு மனைவியிருந்தாலும் குரங்கு போல மற்றொரு பெண்ணின் தொடர்பு வைத்துக்கொண்டு அதை கத்தரிக்க முடியாமல் அவஸ்தை படுபவர்கள் இந்த சேர்த்தி சேவையை தரிசித்தால் அவர்கள் படும் அவஸ்தை நீங்கும். என்னதான் வீட்டுசாப்பாடு ருசியாக இருந்தாலும் வெளியில் சாப்பிடுவதை ருசியாக கருதி விரும்பி சாப்பிடுபவர்கள் கணவன் மனைவியுடன் இந்த சேர்த்தி சேவையை தரிசித்தால் "பிறன்மனை நோக்காதவர்களாக" மாறிவிடுவார்கள்.

இருதார யோகம் பெற்றவர்கள் மட்டுமின்றி எந்தவிதத்தில் களத்திர தோஷம் பெற்று திருமணம் அமையாமல் தவிப்பவர்களும் இந்த சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில்சேர்த்தி சேவை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஸர்வ நிச்சயம் .திருமணம் ஆகாதவர்கள் மட்டுமின்றி திருமணம் ஆனவர்களும் களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டு கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து நிற்பவர்கள், பிரிய நினைப்பவர்கள் அனைவரும் இந்த "சேர்த்தி" சேவையை தரிசித்தால் களத்திரதோஷம் நீங்கி மகிழ்சியான வாழ்வு அமையும் என்பது உறுதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago