முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 2லட்சத்திற்கும் மேல் கடன் செலுத்துவதில் கறுப்புபணமா? வருமான வரித்துறை கெடு பிடி

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      வர்த்தகம்
Image Unavailable

 புது டெல்லி  - 2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் ரூ.2 லட்சத்திற்கும் மேலாக நடைபெற்ற அனைத்துவித பணப்பரிவர்த்தனைகளுக்கும் வருமான வரிக்கணக்கு சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது . ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான வீட்டுக் கடன், கார் கடன் தவணைகள், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் பற்றிய ஆவணங்கனை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும் என, வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர் . உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் கள்ள நோட்டுக்கள், கறுப்புப்பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செல்லாத ரூபாய் நோட்டு பற்றி அறிவிப்பு வெளியான உடன் பலர் நகைகளை வாங்கி குவித்தனர். இதற்கு மத்திய அரசு செக் வைத்தது.இதனையடுத்து பலரும் கடன்களை திரும்ப செலுத்தினர். கிரெடிட் கார்டுகளில் வாங்கிய பொருட்களுக்கு பணத்தை ரொக்கமாக கட்டினர். பெர்சனல் லோன்களை கட்டவும் பண முதலைகள் உதவி செய்தனர். இதற்கும் செக் வைத்துள்ளது மத்திய அரசு.

ரூ. 2 லட்சத்திற்கும் மேல் கடன்
2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரூ.2 லட்சத்துக்கு மேல் கடன் கட்டியவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியவர்கள் வருமான வரி ரிடர்னில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள ஒரு பக்க விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து தர வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

வருமான வரி ரிட்டர்ன்
இது குறித்து வருமானவரித்துறை சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதில் 2016-17 நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை 2017-18ல் சமர்ப்பிக்கும் போது புதிய வருமான வரி ரிடர்ன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும்.

பணம் டெபாசிட்
வருமானம், வரி விலக்கு மற்றும் வரி செலுத்திய விவரம் ஆகியவற்றுடன் புதிய கட்டம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு நவம்பர் 9 தேதிக்கு பிறகு டிசம்பர் 30க்குள் 2 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் எதாவது பணம் டிபாசிட் செய்துள்ளீர்களா என்று குறிப்பிட வேண்டும்.

கிரெடிட் கார்டு பில்
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரூ.2 லட்சத்துக்கு மேல் கடன் தொகையை வங்கிக்கு திருப்பி செலுத்திய விவரம் அல்லது கிரெடிட் கார்டு பில்களை செட்டில் செய்த விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி
 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யப்பட்ட பிறகு வங்கியில் ஒருவர் டிபாசிட் செய்த தொகையும் அவரது ஆண்டு வருமானமும் ஒப்பிட்டு பார்க்கப்படும். கிரெடிட் கார்டு அனைத்தும் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் கடன் வழங்கும் போது பான் எண் விவரங்களை பெற்று கொண்டு தான் வழங்குகிறது. ரூ.2 லட்சத்துக்கு மேல் வங்கியில் டிபாசிட் செய்தவர்களின் விவரங்கள், வருவமான வரி ரிடர்ன் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்துப்போகிறதா என்று வரித்துறை ஆய்வு செய்யும்.

கறுப்பு பண ஒழிப்பு
இதனால் வங்கி கடனை அடைக்க கணக்கில் வராத பணம் அல்லது கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று அறியவே இந்த நடவடிக்கை. உயர்மதிப்பு நோட்டு தடை செய்த போது கணக்கில் வராத பணத்தை 50 சதவீத வரியை கட்டிவிட்டு டிபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதை நிறைய பேர் பயன்படுத்தவில்லை. எனவே வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்கவே இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எளிமைப்படுத்தப்படும்
வருமானவரி ரிடர்ன் விண்ணப்பத்தில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள கட்டம் அடுத்த ஆண்டு முதல் இடம் பெறாது என்று வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறியுள்ளார். வரி செலுத்துபவர்கள் பான்கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்பதால் 7 பக்க விண்ணப்பம் ஒரு பக்க விண்ணப்பமாக மாறியுள்ளது. ரூ.50 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் ரிடர்ன் சமர்ப்பிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்