முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் வசதி செய்யப்பட்டுள்ளது: பெற்றோர்கள் பயன்படுத்திகொள்ள கலெக்டர் வேண்டுகோள்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளின் இருதய அறுவைசிகிச்சை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழாவினை கலெக்டர் சி.அ.ராமன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:-பெற்றோர்கள் தங்களின் குழந்தைக்கு இருதய குறைபாடு உள்ளது என்று தெரியவந்தால் அறுவை சிகிச்சை செய்ய பயந்தோ அல்லது தங்களுடைய வாழ்க்கை பொருளாதாரத்தின் இயலாமையினாலோ இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. இந்த நிலையினை போக்குவதற்காகவே வேலூர் மாவட்டத்தில் இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையான அறுவை சிகிச்சைகள் செய்து குணப்படுத்த பெற்றோர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பினை இந்த விழிப்புணர்வு விழாவின் மூலம் வழிகாட்டுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சை குறித்து கவலையோ அச்சமோ இல்லாமல் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் குழந்தைகளுக்கு இருதய குறைபாடு இருக்கிறதா என்று பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு சென்று முதல்நிலை பரிசோதனையினை மேற்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் நோயின் குறைபாடுகள் அறிந்துகொள்ள 1 வார காலம் தேவைப்படும். ஆனால் தற்போதுள்ள நவீன மருத்துவ கருவிகளின் மூலம் ஒரே நாளில் தங்கள் குழந்தைக்கு இருதய குறைபாடு உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவும் அதற்கு மேல் ஆகும் செலவினத் தொகையினை ஐஸ்வர்யா தொண்டு நிறுவனம் மூலமாகவும் பெற்று இருதய அறுவை சிகிச்சைகளை இலவசமாகவே மேற்கொள்ளலாம். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்கள் தங்கள் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள கவலை கொள்ள தேவையில்லை.மேலும் இருதய அறுவை சிகிச்சை செய்த பின் குழந்தைகளுக்கு சத்தான உணவு வகைகள் மட்டுமே உண்ண வேண்டும். சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது வெளியில் சாப்பிடக்கூடாது. மேலும் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளின் படி மட்டுமே நடத்தல் வேண்டும்.வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் செப்டம்பர் 2016 முதல் ஏப்ரல் 05, 2017 வரை பிறந்த நாள் முதல் 18 வயது வரை நிரம்பிய குழந்தைகளில் பல்வேறு இருதய குறைபாடுகளுடன் 399 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.இவர்களில் 108 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சைகள் செய்து குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளனர். மீதமுள்ள 291 குழந்தைகள் முன் சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைக்கு முழு ஆரோக்கியத்தை வழங்க முதலில் குழந்தைகளை இருதய பரிசோதனை செய்து இருதய குறைபாடுகள் இருப்பின் இருதய அறுவை சிகிச்சைகளை செய்து பயன்பெற வேண்டும். வெற்றி கரமாக பல்வேறு இருதய அறுவை சிகிச்சைகளை செய்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ பிரிவின் துறைத்தலைவர், மலர் மருத்துவமனை குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களை பாராட்டி மேலும் தங்களின் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள கலெக்டர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சிகளின் போது குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ பிரிவின் துறைத்தலைவர் மரு.தேரணிராஜன், அடுக்கம்பாறை மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவின் துறைத்தலைவர் மரு.செல்லையா, குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்க திட்ட இயக்குநர் ராஜபாண்டியன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.உஷா சதாசிவன், மலர் மருத்துவமனை குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மரு.பாலகிருஷ்ணன், மரு.சுவாமி, ஐஸ்வர்யா தொண்டு நிறுவனர் சித்ராவிஸ்வநாதன், மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்