முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் சங்கர் தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் தேவர்சோலா கிராமத்தில் இன்று (12.04.2017) மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர்   தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் 45 பயனாளிகளுக்கு சுமார் ரூ.5 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்மனுநீதி நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்  பேசியதாவது

 இந்த மனுநீதி நாள் விழாவின் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான் பொருள். தமிழக அரசின் உத்தரவின்படி அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் 224 பணிகள் எடுக்கப்பட்டு ரூ.24 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. மேலும் 108 வீடுகள் அளிக்கப்பட உள்ளது. 2015-2016 ஆம் நிதியாண்டில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. குடிநீர் திட்டத்திற்காக ரூ.6 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மோட்டார்கள் அமைப்பதற்காக 4 இடத்திற்கு ரூ.20 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த வருடத்தில் மட்டும் ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் திட்டங்களை முறையாக பயன்படுத்தினால்  தான் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற முடியும். .அதனால் தான் குழந்தைகளின் கல்விக்காக தமிழக அரசு மொத்த பட்ஜெட் தொகையில் 25 சதவீதம் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல பிறக்கும் குழந்தையானது அழகாக, அறிவாக ஊக்கமாக பிறக்க வேண்டுமென்பதற்காக கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ரூ.12,000/-நிதி உதவி வழங்கி வந்த அரசு ரூ.18,000/-ஆக உயர்த்த உள்ளது. மேலும் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தைகள் பெட்டகம் வழங்கப்படுகிறது மேலும் ஒன்பது மாதம் முதல் பதினைந்து வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்படுகிறது. தொடர்ச்சியாக பிள்ளைகள் எப்படி சாப்பிடுவது, பேசுவது, பழகுவது என்று அங்கன்வாடிகள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

மேலும் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள், கலர் பென்சில், இரண்டு செட் காலணிகள், நோட்டுபுத்தகங்கள். ஜியாமெண்டரி பாக்ஸ், அட்லஸ், சைக்கிள், சத்துணவு, ஊக்கத்தொகை, மடிகணினி, சைக்கிள் என அனைத்தையும் வழங்குவது தமிழக அரசு தான். இவையெல்லாம் கொடுப்பதற்கு காரணம் மாணவர்கள் உலகளவில் உயர்ந்து நிற்க வேண்டும் என்பது தான். ஆகவே படிக்கும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளை ஆண், பெண் என்ற பாராபட்சம் பார்க்காமல் படிக்க வைக்க வேண்டும்.பிள்ளைகள் படித்து முடித்த பிறகு  வேலைக்கு செல்வதற்கு அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் தமிழக அரசால் அளிக்கப்படுகிறது.

     மேலும் பெண்களுக்கு திருமண சலுகையும் நமது தமிழக அரசு வழங்குகிறது. பெண் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் ரூ.25,000-மும் 2 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. பெண் பட்டதாரிகளுக்கு ரூ.50,000-மும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அரசு துறைகளும் மனுக்களை பெறும் போது காகிதம் என நினைக்காமல் ஒரு உயிராக நினைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்  கூறினார்.

          இந்நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்