இயேசு நாதர் உயிர்த் தியாகம் செய்த புனித வெள்ளி

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      ஆன்மிகம்
jesus 2014 4 13

இன்று புனித வெள்ளி. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் தினம்தான் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி.இந்த நாளில் இயேசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டார். உலக மக்களுக்காக இந்த சிலுவைத் தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட தேவன் இயேசு கிறிஸ்து.வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்த போதும், அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார் இயேசு நாதர்.யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு நாதரை, பிலாத்து மன்னனிடம் கொண்டு சென்று நிறுத்தினர்.

பிலாத்து விசாரணை நடத்தினான். ஆனால் இயேசு நாதரிடம் ஒரு குற்றமும் இருப்பதாக தெரியவில்லையே என்றான் இறுதியில.ஆனால் கூடியிருந்த யூத கூட்டமோ, இயேசு நாதரை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொடும் கைதியான பாரபாஸை விடுவிக்க வேண்டும் என்று கூச்சலிடமே வேறு வழியின்றி, இயேசுவை சிலுவையில் அறைய உத்தரவிட்டான் பிலாத்து.இதையடுத்து கல்வாரி மலையில் உள்ள கொல்கொதா (கபாலஸ்தலம்) என்ற சிகரத்திற்குக் கொண்டு சென்று இயேசுவையும், கூடவே இரு குற்றவாளிகளையும் சேர்த்து சிலுவையில் அறைய உத்தரவிடப்பட்டது.பிலாத்து மன்னனின் அரண்மனையிலிருந்து இயேசு நாதரை சிலுவையை சுமக்க வைத்து வழியெங்கும் அவரை துன்புறுத்தியபடியே கொண்டு சென்றனர்.

வீதியெங்கும் திரண்டு வந்த மக்கள் இயேசு நாதர் படும் பாட்டைக் கண்டு கண்ணீர் விட்டனர்.கொல்கொதா மலைக்கு கொண்டு வரப்பட்ட இயேசு நாதரை, காவலர்கள் ஆடைகளைக் களைந்தும், சவுக்கால் அடித்தும், தலையில் முள் கிரீடம் சூட்டியும், காரி உமிழ்ந்தும், கன்னத்தில் அடித்தும், அவமானப்படுத்தி ஆனந்தித்தனர். ஆனால் அதை தனது பெரு மனதால் பொறுத்துக் கொண்டார் புன்முறுவலுடன் இயேசு நாதர்.உலகத்தை காக்க வந்த ரட்சகரான இயேசுநாதர், இந்த உலக மக்களுக்காக இந்த துயரத்தையும் தாங்கிக் கொண்டார்.பின்னர் இயேசுநாதரை காவலர்கள் சிலுவையில் அறைந்தனர். சிலுவையில் அவர் அறையப்பட்ட போது உலகமே இருளில் சூழ்ந்ததாக பைபிள் கூறுகிறது.


இந்த நாளைத்தான் புனித வெள்ளியாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் அனுசரிக்கின்றனர். இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ கோயில்களில் இன்று சிறப்புப் பிரார்த்தனை நடக்கிறது. பல கோயில்களில் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை கோயில்களில் பாதிரியார்கள், சிலுவையை இயேசுநாதர் சுமந்து சென்றது போல் செல்லும் உருக்கமான காட்சிகளைப் பார்க்க முடியும்.இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டது முதல் மூன்று மணி நேரத்திற்கு உலகை இருள் சூழ்ந்தது. இதை நினைவு கூறும் வகையில் இந்த மூன்று மணி நேரத்தை மையமாகக் கொண்டு மும்மணித் தியானம் என்ற பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் தேவாலயங்களில் நடைபெறும்.இன்று சிலவையில் அறையப்பட்ட இயேசு நாதர் 3 நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது .

இதை ஷேர் செய்திடுங்கள்: