முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஆணையாளர் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் நகர மக்கள் கோடைகாலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் மனோகர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர் அணையில் பருவமழை பொய்த்ததன் காரணமாக நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது. அணை கொள்ளளவான 23 அடியில்  தற்போது 1 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது வேதனைக்குரிய விஷயம். இதனால் ஆத்தூர் காமராஜர் அணையை நம்பியுள்ள சுற்றுப்புற கிராமம் திண்டுக்கல் நகர மக்களுக்கு முழுமையான குடிநீர் வினியோகம் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் நகர மக்கள் மற்றும் கிராம மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக குடிநீர் சப்ளை செய்வதில் மாநகராட்சி மும்முரம் காட்டி வருகிறது. அரசு மற்றும் மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பருவமழை பொய்த்ததன் காரணமாக பொதுமக்களும் கடுமையான சூழ்நிலையில் குடிநீர் அவசியத்தை புரிந்து கொண்டு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

மாநகராட்சி மூலமாக வழங்கக்கூடிய தண்ணீரை குடிப்பதற்கும் மற்றும் சமைப்பதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற பிற உபயோகங்களுக்கு போர்வெல் மற்றும் கிணறு நீரை பயன்படுத்த வேண்டும். ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வீணாக்காமல் மக்கள் சேமிக்க பழகிக் கொள்ள வேண்டும். காவிரி கூட்டுக் குடிநீர் மூலமும் தண்ணீர் பெற முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நிலைமையை உணர்ந்து மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தண்ணீர் வரும் சமயங்களில் மின்மோட்டார் வைத்து எடுக்கக் கூடாது. மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதைக் கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மோட்டார் மூலம்  தண்ணீர் எடுக்கும் வீடுகளை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்வார்கள். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் மோட்டார்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன் ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்பும் பயனாளிகள் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம். அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் மனோகர் தெரிவித்தார்.

பேட்டியின் போது பொறியாளர் கணேசன், நகர்நல அலுவலர் டாக்டர் அனிதா ஆகியோர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்