முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்புக்கு எதிர்ப்பு - பா.ஜ.க.வினர் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,ஏப்.17 தெலுங்கானா மாநிலத்தில் பின்தங்கிய முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா மாநில சட்டசபை சிறப்புக்கூட்டம் நேற்று தொடங்கியது. அப்போது முஸ்லீம் மதத்தில் பின்தங்கியவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பிலும் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் டி.கிஷான் ரெட்டி, கே. லட்சுமணன், பிரபாகர், ராமசந்திர ரெட்டி, ராஜா சிங் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் அனைவரும் சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த மசோதாவானது   மத அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய வழிவகுப்பதால் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர்கள் கூறினார்.

சட்டசபை நேற்று துவங்குவதற்கு முன்பு அந்த 5 எம்.எல்.ஏ.க்களும் கறுப்புத்துணியை கட்டிக்கொண்டு ஹாசன் சாகர் ஏரிக்கு அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில் இருந்து சபைக்கு நடந்து சென்றனர். இந்த மசோதாவில் ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதை அவர்கள் ஆதரித்தனர். ஆனால் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சபையில் கோஷம் போட்டனர்.  இதனால் அந்த 5 எம்.எல்.ஏ.க்களும் சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதனால் சபையில் இருந்து வெளியேறிய அவர்கள்,சபை வளாகத்தில் இருக்கும் காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வெளியேற்றிவிட்டனர் என்று பா.ஜ. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார்.

ஐதராபாத் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து சட்டசபையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர் என்றும் பிரகாஷ் ரெட்டி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்