கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      கடலூர்

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு கலெக்டர் நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார்.மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 316 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மக்கள் நீண்ட தூரத்திலிருந்து வந்து இக்குறைகேட்பு நாளில் தங்களது குறைகள் குறித்து மனுக்களை அளிக்கின்றனர். இம்மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு பதில் அளிப்பது கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளின் கடமையாகும். எனவே, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இம்மக்கள் குறைகேட்புக்கூட்டத்தில் கலெக்டர் , ஒரு மாதத்திற்கு முன்பாக இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்கள் அளித்த திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் கிராமத்தைச் சேர்ந்த 36 நரிக்குறவர்களுக்கு ரூ.5,85,420- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இந்த இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தலைமை அளவையாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களுக்கு தனது பாராட்டுக்களை கலெக்டர் தெரிவித்தார். இதேபோன்று மற்ற அலுவலர்களும் தங்களை பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார். இலவச வீட்டுமனை பட்டாக்களைப் பெற்ற பெண்ணாடம் கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய கலெக்டர் அவர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.கலெக்டர் விருத்தாச்சலம் வட்டம் பெரியாக்குறிச்சி கிராமம் சந்திரசேகரன் தபெ குலுந்தன் என்பவரின் மகன் செல்வன் தனுஷ் (வயது 13) என்பவர் 26.06.2016 அன்று சுவர் இடிந்து விழுந்து இறந்தமைக்காக வருவாய்த்துறை மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையை சந்திரசேகர் அவர்களிடம் வழங்கினார். மேலும், கலெக்டர் , கடலூர் வட்டம், கடலூர் முதுநகர், ஆற்றங்கரை வீதி, எண்.24 என்ற முகவரியை சார்ந்த முத்து, தபெ குப்புசாமி என்பவர் 01.10.2011 அன்று சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இறந்தது தொடர்பாக வருவாய்த்துறையின் மூலம் அரசு நிவாரண உதவியாக ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை வாரிசுதாரரான அவரது சகோதரி செல்வி என்பவரிடம் வழங்கினார்.இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு) கணேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதிவாணன் உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: