தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.2,75,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று (17.04.2017) நடைபெற்றது.

 

குடும்ப அட்டை

 

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.


குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும் மற்றும் ஆதிதிராவிடர் சட்ட பட்டதாரிகளுக்கான ஊக்கத் தொகை தலா ரூ.50,000 வீதம் 5 சட்ட பட்டதாரிகளுக்கு ரூ.2,50,000த்திற்கான காசோலைகளையும் ஆக மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.2,75,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரவணன், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: