முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெச் 1 பி நிறுவனங்களுக்கு அமெரிக்க குடியுரிமைத் துறை கிடுக்கிப்பிடி

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  -  அமெரிக்க குடியுரிமைத் துறை ஹெச் 1 -பி விசாக்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து விரிவான செய்திக் குறிப்பை  வெளியிட்டுள்ளார்கள். "அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஊழியர்கள் கிடைக்காத பட்சத்தில், வெளிநாட்டிலிருந்து அழைத்து வருவதற்காக உருவாக்கப்பட்டது தான் ஹெச் 1 விசா திட்டம்.ஆனால் ஏராளமான அமெரிக்கர்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும், குறிப்பிட்ட வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்கும் நிலையில், அவர்களை புறந்தள்ளி விட்டு வெளி நாட்டு ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஹெச் 1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தி, அமெரிக்க ஊழியர்களுக்கு எதிராக குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் பணியில் அமர்த்தி வருகின்றன. அமெரிக்க ஊழியர்களை பாதுகாப்பது தான்  குடியுரிமைத் துறையின் தலையாய பணியாகும்.

இனி வரும் நாட்களில் கள ஆய்வுகளில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும். தொழில் பற்றிய தகவல்கள் அறியப்படாத நிறுவனங்கள், ஹெச் 1 பி விசா ஊழியர்களை பிரதானமாக நம்பி நடத்தப்படும் நிறுவனங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.தவிர, நிறுவன முதலாளிகளே இன்னொரு நிறுவனத்திலோ அல்லது இன்னொரு நிறுவன அலுவலகத்திலோ வேலை பார்த்து வந்தால், அந்த நிறுவன ஹெச் 1 பி விசா ஊழியர்கள் பற்றியும் முழு கள ஆய்வு செய்யப்படும்.

கள ஆய்வு மூலம்  அந்தந்த நிறுவனங்கள் உள்ளூர் அமெரிக்க ஊழியர்களை பணியில் அமர்த்த எடுக்கப்பட்ட முயற்சிகள் கண்டறியப்படும்.ஹெச் 1 பி ஊழியர்களுக்கு பாதுகாப்புமுன்னறிவுப்பு இல்லாமல், தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களின் விசா விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் ஹெச் 1 பி ஊழியர்கள் மீது கிரிமினல் அல்லது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட மாட்டாது.மாறாக விசா திட்டத்தை ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களை கண்டறிவதற்காகத் தான் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்படும். விசாவில் குறிப்பிட்டுள்ள ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் பற்றிய தகவல் தெரிவிக்கும் ஹெச் 1 பி ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சில பாதுகாப்புகள் வழங்கப்படும்"இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்