முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா வழிகாட்டி என்பவர் சேவை மனப்பான்மை உள்ளவராக இருக்க வேண்டும் பயிற்சி முகாமில் கலெக்டர் பொ.சங்கர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

சுற்றுலா வழிகாட்டி என்பவர் சேவை மனப்பான்மை உள்ளவராக இருக்க வேண்டுமென ஊட்டியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கூறினார்.

                         பயிற்சி முகாம்

நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் ஊட்டியிலுள்ள சுற்றுலா வழிகாட்டிகளுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பயிற்சி அரங்கில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜன் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்து பேசியதாவது-

                            நடை, உடை, பாவணை

நமது ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தன்மையுடன் பேச வேண்டும். நம்முடைய நடை, உடை, பாவணையை வைத்துத்தான் சுற்றுலாப் பயணிகள் நம்மை எடைபோடுவார்கள். ஆகையால் சுற்றுலா பயணிகளிடம் எதையும் ஏமாற்றாமல் நல்ல இடங்களையும், நல்ல லாட்ஜ், ஓட்டல்கள் விலைக்கேற்றமாதிரி இருக்கிறது என்பதை எடுத்துக்கூறி அவர்களை திருப்தியடை செய்ய வேண்டும். நீங்கள் நடந்து கொள்ளும் முறையில் தான் உங்களை நல்லவரா, கெட்டவரா என்று தெரிந்து கொள்வார்கள். சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும்போது அவர்களை இறக்கி விட்டு மட்டும் செல்லாமல் அந்தந்த இடங்களைப் பற்றியும், அங்குள்ள மரம், பூக்களைப் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். சரியான முறைப்படி சுற்றுலா தலங்களை காண்பிக்க வேண்டும்.

                                  31 லட்சம் சுற்றுலாப் பயணிகள்

ஒரு சுற்றுலா வழிகாட்டி என்பவர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நல்ல பேச்சுத்திறன் உள்ளவராகவும், நல்ல அணுகுமுறை உள்ளவராகவும், நீலகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும், சேவை மனப்பான்மை உள்ளவராகவும், மாவட்டத்தின் தூதுவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் நமது ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எங்கள் ஊர் பிளாஸ்டிக் இல்லாத ஊர் என்றும், ஆகையால் நீங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை எங்கள் ஊரில் எங்கும் வீசாதீர்கள் என்று எடுத்துக்கூற வேண்டும். ஊர் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆகையால் சுற்றுலாப் பயணிகளுக்கு நமது ஊரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க சொல்லிக்கொடுக்க வேண்டும்.

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் 1990 ம் ஆண்டு 13.37 லட்சமும், 1995 ம் ஆண்டில் 13.45 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2000ம் ஆண்டில் 15.74 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 2005ம் ஆண்டில் 19.29 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2010ம் ஆண்டில் 21.58 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 2015ம் ஆண்டில் 29.38 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2016ம் ஆண்டில் 31.16 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டு (2017) சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

                                           கடமைகள் மற்றும் பொறுப்புகள்

தொடர்ந்து சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குநர் வித்யாசாகர் சுற்றுலா வழிகாட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தார். இரண்டு நாள் நடைபெறும் பயிற்சி முகாமில் சுற்றுலா வழிகாட்டிகளின் கடமைகளும் பொறுப்புகளும், சுற்றுலா வழிகாட்டிகளின் நன்நடத்தை கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள், சுற்றுலா வழிகாட்டிகளின் பேச்சுத்திறன் மற்றும் தகவல் திறன் மேம்பாடு, சேவை மனப்பான்மை, அணுகுமுறை உத்திகள் ஆகியவை பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்முகாமில் உதவி சுற்றுலா அலுவலர் துர்கா நீலகிரி மாவட்ட சுற்றுலா வழிகாட்டுநர்கள் சங்க தலைவர் முருகன், செயலாளர் பீட்டர் பிரான்சிஸ், பொருளாளர் பியோபி, மலையரசி மாவட்ட சுற்றுலா வழிகாட்டுநர் சங்க தலைவர் அகமது கான், செயலாளர் முருகன், பொருளாளர் பிரபு மற்றும் சுற்றுலா வழிகாட்டுநர்கள், பண்டைய பழங்குடியின இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்